யாருமே செய்யாத சாதனை படைத்த இளையராஜா
இசை உலகில் இத்தனை ஆண்டுகள் ஒருவர் ஆக்டிவாக இருந்திருப்பாரா என்பதே டவுட்தான். அந்த சாதனை அசால்ட்டாக செய்துமுடித்து இன்னும் வீறுநடை போடுகிறார் இளையராஜா. ஆமாங்க. அவரது இசையமைப்பில் உருவான முதல் படம் அன்னக்கிளி வெளியாகி இன்னையோட 49 ஆண்டுகள் ஆகிறது. அதாவது, இளையராஜா தனது இசைப் பயணத்தில் 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

அன்னக்கிளி உன்னைத் தேடுதே
அப்போது வானொலிகள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த காலம். தமிழ்நாட்டு ரேடியோ பெட்டிகளில் கூட இந்திப் பாடல்கள்தான் ஓடும். அப்போது ஒரு மனிதர் மின்னல் போல வந்து புரட்சி செய்தார். அவர்தான் இளையராஜா. அவரது எண்ட்ரிக்கு முன்பு தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்ப யோசித்த வானொலி நிலையங்கள், அதற்குப்பின் தமிழ் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பின. அவைதான் ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள். 1976ஆம் ஆண்டு மே 14ஆம் தேதிதான் அப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ராஜா என்ற மாமனிதனை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

புது ராகம் படைப்பதாலே, நானும் இறைவனே
பெல் பாட்டம் பேண்ட், கலர் கலர் சட்டை போட்டு சுற்றிக் கொண்டிருந்த இளையராஜா, அன்றைய இசையமைப்பாளர்கள் போல இல்லை. அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்களை விட கேலி செய்தவர்கள்தான் ஏராளம். அதையெல்லாம் ராஜா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ஹார்மோனியத்தை தொட்டாலே இசை அவருக்கு அருவி போல கொட்டியது. அன்றைய இயக்குநர்கள் அதனை அள்ளி பயன்படுத்திக் கொண்டனர். இசையை படைத்து இறைவனாகவே மாறினார் ‘இளையராஜா’.

நீண்ட நெடும் பயணம்
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவரது துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் உச்சத்தில் இருக்க முடியாது என்பார்கள். அதனையெல்லாம் உடைத்து எறிந்தவர் இளையராஜா. 90களுக்கு மேல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதிக்கம் தொடங்கியது என்று கூட சிலர் சொல்வதுண்டு. ஆனால், வீரா, வள்ளி, விருமாண்டி, அவதாரம், மீரா, சேது, பாட்டு வாத்தியார் போன்ற ராஜாவின் முக்கியமான படங்கள் 90களுக்கு பின்பு வந்தவைதான்.

தொட்டுத் தொடரும் பாரம்பரியம்
இசைப் பயணத்தில் 49 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இளையராஜா, இந்த வயதிலும் சிம்பொனி வாசிக்கிறார். அவருடைய நாடி, நரம்புகள் முன்பை விட சுறுசுறுப்பாக உழைக்கின்றன. இன்னும் 50 ஆண்டுகாலம் அவர் இசையமைத்து நமது காதுகளில் அமுதினை ஊற்றுவார் என்று நம்புவோம்.