உங்க குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறாங்களா? இதை படிங்க. .
“கங்கா சந்திரமுகி மாதிரி நின்னா, நடந்தா, அப்றம் சந்திரமுகியாவே மாறிட்டான்னு” வர்ற டயலாக் மாதிரிதான்.
எந்த வார்த்தைக்கு எந்த அர்த்தம் என்பதெல்லாம் குழந்தைகளுக்கு தெரியாது. பெரியவர்கள் எந்த உணர்வுக்கு எந்த வார்த்தை பயன்படுத்துகின்றனர்? என்பதை மட்டுமே அவர்கள் கவனிப்பார்கள். உதாரணத்துக்கு கோபம் வந்தால் ஒரு சில வார்த்தைகளை பிறர் பயன்படுத்துவதை குழந்தைகள் நன்கு கவனிக்கும். அந்த வார்த்தைகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும். கோபம் வரும்போது தானும் அதைப் பயன்படுத்திப் பார்க்கும்.
- தொட்டதற்கெல்லாம் சத்தியம்
குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து கிரகித்துக் கொள்ளும் வார்த்தைகளில் ஒன்று சத்தியம். இதை எடுத்தாயா? அவளை அடித்தாயா? என்று கேட்டால் சத்தியமாக இல்லை என்று பதில் சொல்வார்கள். ஒரு விஷயத்தில் நிச்சயம் தான் அதை செய்யவே இல்லை என்பதை நிரூபிக்க கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் போது அந்த உணர்வை வெளிப்படுத்த சத்தியம் செய்வது உண்டு. இதன் அர்த்தம் புரியாமலே குழந்தைகள் அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்தும். இது பெரியவர்கள் மட்டுமே பேசக்கூடிய வார்த்தை என்றும், அதற்கு மாறாக உண்மையாக, நிச்சயமாக, நிஜமாக, நேர்மையாக சொல்கிறேன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கற்றுத தரலாம்.
- சபிப்பது
யாரிடமாவது கோபம் வந்தால் அவர்களை சபிக்கும் வழக்கம் கண்டிப்பாக குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்க கூடும். கோபத்தின் வெளிப்பாடாக இதனை செய்வர். யாரை சுட்டிக்காட்டி சபிக்கிறோமோ அவர்கள் மனதளவில் மிகவும் புண்படுவார்கள் என்று கூற வேண்டும். அடுத்தவர்களை காயப்படுத்தக் கூடாது என்றும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்னடத்தையே கற்றுக் கொடுக்க வேண்டும்.
- நாயே, பேயே என்ன திட்டுவது
சாதாரண சமயங்களில் கூட ஒருவர் இன்னொருவரை அழைக்க, இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடும். இதனை உங்கள் குழந்தை உங்கள் அருகிலேயே இருந்து கிரகித்துக் கொள்கிறது, என்பதை நீங்களும் உணர்ந்து இருக்க மாட்டீர்கள். ஆனால் குழந்தை வீட்டில் உள்ள பெரியவர்களை, பக்கத்து வீட்டில் இருப்பவர்களையோ தனது பள்ளியில் படிப்பவர்களையோ உடனடியாக இங்கே வருமாறு அழைக்க இதே வார்த்தைகளை பயன்படுத்தக்கூடும். இது அவர்களுக்கு ஒழுக்கமின்மையை ஏற்படுத்தும். எனவே முதலில் வீட்டில் பேசக்கூடிய வார்த்தைகள் என்ன? பேசக்கூடாதவை என்ன? என்பதை பெற்றோர் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். அவ்வாறே நடந்தால் வீட்டிலேயே பேசாத வார்த்தைகளை எதற்காக வழியில் பேச வேண்டும்? என்று குழந்தைகளும் விட்டுவிடும்.
- பயங்கரமான கெட்ட வார்த்தைகள்
பெற்றோர் இடையே ஏற்படும் அதீத சண்டைகளில் வார்த்தைகளை விடும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வெளிப்படுத்திய கெட்ட வார்த்தையின் அர்த்தம் புரியாமலே அந்த குழந்தை மழலை மொழியில் மீண்டும் திரும்பச் சொல்லும். இது உங்களை நீங்களே வெட்கித் தலை குனியும் அளவிற்கு சூழ்நிலையை சில சமயம் பொது வெளியிலும் ஏற்படுத்தி விடும்.
- எப்படி தடுப்பது?
குழந்தைகள் கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு உடனடியாக ரியாக்ட் செய்ய வேண்டாம். இது, கோபத்தில் அடுத்தவர்களுடைய அட்டென்ஷனை பெற வைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்காமல் இருக்கும். இனி அந்த வார்த்தை பயன்படுத்தினால் அந்த அட்டென்ஷன் கிடைக்காது என உணர்ந்துவிட்டால் குழந்தைகள் மாற்று வார்த்தையை தேட ஆரம்பிக்கும்.
- எப்படி புரிய வைப்பது?
முதலில் இக்னோர் செய்யவும். அதன் பின்பு குழந்தைகளிடம் இந்த வார்த்தையை சொல்லும் போது அவர்களுக்கு என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது? என்பதை கேட்க வேண்டும். அதற்கான மாற்று வார்த்தைகளை அவர்களுக்கு சொல்லி தர வேண்டும். குறிப்பாக ஒரு பொருளைக் கேட்டு கொடுக்காவிட்டால் கெட்ட வார்த்தை பேசுவதற்கு பதில் “ப்ளீஸ்” என சொல்லிக் கேட்கப் பழக்குங்கள், இந்த வார்த்தை அந்தப் பொருளைக் கிடைக்கச் செய்யும் என்ற நம்பிக்கையையும் அளியுங்கள்.
- நன்னடத்தையை ஊக்குவிப்பது எப்படி?
நீங்கள் சொன்ன பின், உங்கள் குழந்தை கோபமாக இருக்கும் வேளையில் கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்த்து விட்டால் அவர்களை பாராட்டலாம். நீ இந்த செயலை கோபத்தக் கட்டுப்படுத்தி, சிறப்பாக கையாண்டாய் என பாராட்டும் போது அந்த குழந்தைக்கும் இந்த அணுகுமுறைதான் சரி என்பதை உணர தூண்டும். மறுமுறை பாராட்டுக்காகவே அவர்கள் நன்னடத்தையையும் நல்ல வார்த்தையையும் பேசி பழகுவர். நாளடைவில் இதுவே அவர்களுக்கு பழக்கமாகவும் மாறிவிடும்.
பின்னாளில் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி உறவுகளை காயப்படுத்தும் போது ஏற்படும் விளைவுகளையும் அவர்களுக்கு புரிய வைக்கலாம். குழந்தைகளை உரிய நேரத்தில் சாப்பிட வைப்பது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது, உறங்க வைப்பது, அவர்களுக்கான கல்வி கட்டணம் செலுத்துவது மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. சிறுவயதில் இருந்தே சரியான வார்த்தைகளை பிரயோகிக்க கற்றுக் கொடுப்பதும் பெற்றோரின் கடமை. இது போன்ற நல்ல தகவல்களையும் பேரன்டிங் டிப்ஸ்சையும் தெரிந்து கொள்ள அடிக்கடி “த காரிகை”யின் பக்கம் வந்து செல்லுங்கள். எங்களது சமூக வலைதள பக்கங்களையும் பின் தொடருங்கள்!
நற்பண்பாளர்களை வளர்த்தெடுக்க வாழ்த்துக்கள்!