“ஆட்டோ கண்ணாடியை திருப்பினா ஆட்டோ எப்படி ஜீவா ஓடும்?” என கேட்பது போல் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் எப்படி தருகிறார்கள்? என்ற ஒரு கேள்வி தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.

இதற்குக் காரணம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மை வி3 ஆட்ஸ் என்ற கோவையைச் சேர்ந்த சக்தி ஆனந்தன் என்பவர்தான். இவர் எம்எல்எம் போன்ற ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவர் சில ஆயுர்வேத பொருட்களை விற்பதாக கூறி அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நபர்களிடம் தங்களது விளம்பரங்களை பார்ப்பதால் பணம் கொடுப்பதாக ஒரு வாய்மொழி ஒப்பந்தத்தின் பெயரில் கமிஷன் தொகையை கொடுத்து வருகிறார்.

இவர் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதாகவும், என்றாவது ஒருநாள் பணத்தை சுருட்டி கொண்டு தப்பி விடுவார் என்றும் எச்சரிக்கும் வகையில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இது பொய் வழக்கு என கூறுவதற்காக நீலாம்பூர் சாலையில் கூடுமாறு சக்தி ஆனந்தன் அழைப்பு விடுக்க, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அவரது செயலியில் பணம் சம்பாதித்து வருவதாக கூறும் நபர்கள் குவிந்தனர்.

அவர்கள் “நாங்கள் முதலீடு செய்யவில்லை, முறையாக பொருட்களை வாங்கி பயன்படுத்துவதாகவும்,
பிறவையும் இந்த நிறுவனத்தில் சேர்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறோம்” என்றும் கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை படத்தில் வரும் எம்எல்எம் என்ற மல்டி லெவல் மார்கெட்டிங் பாணியில் தான் மக்களையே விளம்பரத் தூதர்களாக்கி இந்த மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த திட்டத்தில் புதிதாக நபர்கள் இணையும் வரை இந்த திட்டம் இருக்கும் என்றும் இதை அடுத்து வருமானம் கொடுக்க முடியாமல் மக்களின் பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆயினும் மக்கள் தங்களுக்கு வருமானம் வருவதால் நம்புகிறோம் தங்களது வாழ்வாதாரத்துக்கு இது உதவுகிறது எனவே பொய் வழக்கு போட்டு ஏமாற்ற வேண்டாம் என்றும் கூறி பல்வேறு வகையில் பேட்டிகளை கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் வந்திருப்பவர்களிடம் “இனி அந்த நிறுவனம் எங்களை ஏமாற்றினால் நாங்கள் போலீசில் புகார் கொடுக்க மாட்டோம், எங்கேயும் சென்று போராட்டம் நடத்த மாட்டோம், நீதி கேட்டு நீதிமன்ற வாசலைத் தட்ட மாட்டோம், ஏமாறினால் அதற்கு நாங்களே முழு பொறுப்பு” என்று எழுதி வாங்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது.

யூடியூபில் விளம்பரங்களை பார்த்தால், இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வியும் நிச்சயம் வருகிறது.

இது பற்றி விளக்கிய ஒரு சைபர் கிரைம் வல்லுநர், இந்த திட்டத்தில் 6 வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கூறியுள்ளார்.

முதல் வகையில் கட்டணம் இல்லை, விளம்பரம் பார்த்தால் தினமும் 5 ரூபாய் வீதம் மாதம் ரூ.150 சம்பாதிக்கலாம்

அவரே 360 செலுத்தி உறுப்பினரானால் ஒரு நாளைக்கு 7 ரூபாய் கிடைக்கும். அதே அளவு கட்டணமும் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இதை அடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்தால் அவர்களுக்கு 15 ரூபாய் கிடைக்கும்..
புதிதாக ஒரு கிரவுன் உறுப்பினரை சேர்த்தால் 6000 ரூபாய் கிடைக்கும். அவருக்கு கீழ் ஆட்கள் சேரும்போதும் கமிஷன் கிடைக்கும்

அவ்வாறு 1,21,000 ஆயிரம் செலுத்தி கிரவுன் உறுப்பினர் திட்டத்தில் சேர்ந்தால், மாதா மாதம் ஒரு ஊதியம் நம்மால் பெற முடியும் என்று இவர்கள் மக்களை நம்ப வைத்துள்ளனர்.

விளம்பரத்தை தொடர்ந்து பார்க்கிறீர்களா? என்று கேட்டால் ‘ஆம்’ என்று கிளிக் செய்வதும், பின் திரையில் தெரியும் கோடை வாட்ஸ் அப் செய்வதும் இவர்கள் பணியாக உள்ளது.

அடுத்தடுத்து உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் வரை இந்த திட்டம் செயல்பட வாய்ப்புள்ளது. ஆனால் அப்படி ஒரு சேர்க்கை நின்றால் இந்த கோபுரம் அடிமட்டம் ஆட்டம் கண்டு அலேக்காக சரியும். அப்போது இது நம் தலைமுறையில் பார்க்கக்கூடிய மிகப்பெரிய மோசடியாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE