தாய்ப்பாலை எப்போது? எப்படி நிறுத்துவது?
பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்பது அமெரிக்க குழந்தைகள் மருத்துவ சங்கம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள விதி. அந்த 6 மாதங்களுக்கு தண்ணீர் கூட குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது. அதன் பிறகு இணை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக தாய்ப்பால் உடன் சேர்த்து கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை 2 வயது வரையோ அல்லது தாய்ப்பால் சுரக்கும் வரையோ கொடுக்கலாம்.
2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை நிறுத்த பல பெண்களும் முயற்சிக்கின்றனர் என்கிறார் புதுவை லட்சுமி நாராயண மருத்துவ கல்லூரி குழந்தைகள் நல மருத்துவர் ஜெயராஜ். அவர் தாய்ப்பால் பற்றி கூறிய விவரங்கள் பின்வருமாறு
“2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை உடனே நிறுத்த வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை. தாய்ப்பால் சுரக்கின்ற வரை குழந்தைகளுக்கு வழங்கலாம். ஆரம்ப கட்டமாக முதல் 6 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த 6 மாதங்களில் தாய்ப்பாலை அதிகரிக்க தேவையான உணவு வகைகளை பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
“2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை முதல் 6 காலகட்டத்தில் தாய்ப்பால் புகட்ட வேண்டும். குழந்தை அழட்டும். பின்னர் பால் புகட்டலாம் என விட்டுவிடக் கூடாது. குழந்தைக்கு தாய்ப்பால் தேவை என்பதை அதுவே ஒரு சில அறிகுறிகள் மூலம் வெளிக்காட்டும். உதாரணமாக பசி எடுத்தால் கை விரலை சப்பும். பாலை குடிப்பது போன்று உதட்டை குவிக்கும். அந்த நேரத்தில் குழந்தை தாய்ப்பாலை எதிர்பார்க்கிறது என அர்த்தம் ஆகும்.”
“தாய்ப்பால் புகட்டும் போதே உடனடியாக சில குழந்தைகள் தூங்கி விடும். அப்படி தூங்கினாலும் குழந்தைகளை எழுப்பி தாய்ப்பாலை குடிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை மீண்டும் விழிப்புக்கு வந்து அழும்.”
“தாய்ப்பாலை பொருத்தவரை 2 வகை உண்டு ஒன்று முன்பால் மற்றொன்று பின்பால். குழந்தை குடிக்க ஆரம்பிக்கும் போது வருவது தான் முன்பால். அதில் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். ஒரு ஐந்து நிமிடங்கள் கொடுத்த பின்னர் வருவது தான் பின்பால். இதில் லிப்பிடுகள், ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்டவை நிறைந்து இருக்கும். குழந்தையின் பசியை போக்கி போக்ஷாக்கை தருவது பெரும்பாலும் பின்பாலே. ஒரு குழந்தை முழுதாக பசியாற 20 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.”
“ஒரு மார்பில் முழுதாக பால் குடித்த பின்னர் மறு மார்பில் பால் கொடுக்க வேண்டும். மருமார்பில் பால் குடிக்க தொடங்கும் போது வயிறு நிரம்பி குழந்தை தூங்கி விடும். அப்படி நடந்தால், குழந்தை மறுமுறை பால் கேட்கும் போது அதே மார்பில் இருந்து தொடங்க வேண்டும்.”
“முதல் 6 மாத குழந்தைகளுக்கு பகலைப் போன்றே இரவிலும் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் புகட்ட வேண்டும்.”
“2 வயதுக்கு மேல் தாய்க்கு பால் சுரந்தாலும் தாராளமாக வழங்கலாம். இரவில் மட்டுமாவது கொடுக்கலாம். ஒருவேளை தாய்ப்பாலை வேறு ஏதேனும் காரணங்களுக்காக நிறுத்த நினைத்தால் காம்பில் விளக்கெண்ணெய் தடவிக் கொள்ளவும். அந்த சுவை பிடிக்காது குழந்தை பால் குடியை மறந்து விடும்” என்கிறார் மருத்துவர்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள த காரிகையின் சமூகவலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்.