தெரியுமா? இன்று உடன்பிறப்பு தினம்!
அம்மாவுக்கு ஒரு தினம். அப்பாவின் சிறப்பை கொண்டாட ஒரு தினம், இருப்பது போல் உடன்பிறப்புக்கும் ஒரு தினம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஏப்ரல் 10, 2023 ல் சர்வதேச உடன்பிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
- யாரெல்லாம் கொண்டாடலாம்?
“சிப்லிங்ஸ் டே” என அழைக்கப்படும் உடன்பிறப்பு தினம், ஒரே தாய்-தந்தைக்குப் பிறந்த அண்ணன்-அக்கா-தம்பி-தங்கை உள்ளிட்ட உறவுகளை குறிக்கிறது. ஒன்றாக பிறந்து, ஒரே தலைமுறையில் வாழ்ந்து, திருமணத்துக்குப் பின்பும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருந்து, இறுதி மூச்சு வரை உடன் வரும் உறவுகளில் ஒன்று உடன்பிறப்பு. இந்துக்கள் இதை ரக்ஷா பந்தனாகக் கொண்டாடுகின்றனர்.
- அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு
உடன்பிறப்பு தினத்தின் நோக்கம் தங்களது உடன் பிறந்த சகோதர சகோதரிகளை ஒருவருக்கொருவர் மதித்து பாராட்டிக்கொள்வதாகும். வாழ்க்கை சூழல், பணி சூழல் போன்றவற்றில் சிக்கி வாழ்வின் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டாலும், இன்றைய தினத்தில் ஒரு வாழ்த்து அவர்களை மகிழ்விக்கலாம். அவர்கள் மீதான உங்களது அன்பும் ,அக்கறையும் வெளிப்படுத்தும் ஒரு தருணமாக இது அமையும்.
- எப்படியெல்லாம் கொண்டாடலாம்?
உடன்பிறப்பு தினத்தன்று பரிசுகளையும், வாழ்த்து அட்டைகளையும் பரிமாறிக் கொள்ளலாம். இருவருக்கும் கிடைப்பதற்கு அரிய நேரத்தை ஒன்றாக சில மணி நேரங்களோ ஒரு நாள் முழுவதுமோ செலவிட்டு மகிழலாம். குறிப்பாக அவர்கள் வாழ்ந்த பால்ய கால நினைவுகளை நினைவூட்டும் வகையில் இது இருக்கலாம். உதாரணத்துக்கு ஒன்றாக வாழ்ந்த வசிப்பிடங்களையும், விளையாடிய பூங்காக்களையும், ஒன்றாக சேர்ந்து சென்ற இடங்களையும் மீண்டும் கைகோர்த்துச் சென்று காணலாம். திரையரங்கிற்கோ, அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கோ சென்று கூட தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளலாம்.
- பழைய போட்டோவை மீண்டும் ரீ கிரியேட் செய்யலாம்
சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கிட்டத்தட்ட அதே போஸில், அதே பின்னணியில் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்டு ரிக்கிரியேஷன் செய்யலாம். அல்லது சிறு வயதில் எடுத்த புகைப்படங்களை பரிசளித்து, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியூட்டி பழைய நினைவுகளை அசை போட வழி வகுக்கலாம்.
- சண்டையும், சுவாரஸ்யமும்
ஒன்றாக படித்த பள்ளிக்கு செல்லலாம். இருவரும் எதிரிகள் போல் சண்டையிட்ட நிகழ்வுகளை நகைச்சுவையாக பேசலாம். இவற்றின் மூலம் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த உடன்பிறப்பு தினம் உருவாக்கும் என நம்பப்படுகிறது. பெரியவர்களானதும், ஏற்பட்ட மனக்கசப்புக்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் இது வாய்ப்பளிக்கிறது.
- வரலாறு என்ன?
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேன்ஹெட்டனைச் சேர்ந்த கிளாடியா எவர்ட், தனது இளமை பருவத்தில் தனித்தனி விபத்துகளில் இழந்த மறைந்த உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்தினார். 1990களில் அதற்காக உடன்பிறப்பு தினம் என்ற நாளையும் அறிவித்தார். இந்த நாளை சர்வதேச அளவில் கொண்டாடும்போது உடன்பிறப்புகளுக்குள்ளான பிணைப்பு அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அந்த நாளின் முக்கியத்துவம் கருதி 1995ல் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, தொண்டு நிறுவனமாக நிறுவினார் அமெரிக்காவின் 3 அதிபர்கள் இதனை அங்கீகரித்தனர். பராக் ஒபாமா, ஜார்ஜ் டபுள்யூ புஷ், பில் கிளின்டன் ஆகிய மூவரும் இந்த உடன்பிறப்பு தினத்தை ஆமோதித்தனர். இது உடன்பிறந்தோர் தினத்தை பிரபலப்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்க தூண்டியது.
The Karigai-யின் சகோதரிகளுக்கும் “இனிய உடன்பிறப்புக்கள் தின” வாழ்த்துக்கள்.