குத்துச் சண்டையில் தங்க மங்கைகள்
“ஒரு பெற்றோருக்கு குழந்தைகளைப் படிக்க வைப்பது மட்டும் கடமையல்ல. தங்களது குழந்தைகளின் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதும் தலையாய கடமை தான்”
உலக பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கங்களும், ஞாயிறன்று நடந்த போட்டியில் மேலும் 2 தங்கப்பதங்கங்களும் வென்றுள்ளது இந்தியா.
தங்க மங்கைகள் நால்வர் யார்?
நீத்து கங்காஸ்
2000-ஆவது ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர் நீத்து கங்காஸ். வீட்டில் தம்பியிடம், பள்ளியில் தோழர்களிடமும் அடிதடி என எப்போதும் குறும்பாகவே இருந்து வம்பிழுத்து வந்தார் நீத்து கங்காஸ். எனவே அவரது ஆற்றலை உரிய முறையில் நல்வழிப்படுத்த அவரது தந்தை குத்துச்சண்டைப் போட்டியில் நீத்துவை சேர்த்து விட்டார். முதல் 2 ஆண்டுகள் சரிவர விளையாடவில்லை. முன்னேற்றமும் இல்லை.
எனவே பாக்ஸிங்கையே விட்டு விடத் துணிந்தார் நீத்து. ஆனால், அவரது தந்தை 3 ஆண்டு தனது பணி, வருமானத்தை விட்டுவிட்டு, முறைப்படி பயிற்சிக்கு அழைத்து சென்றார். பி.ஏ. படித்த நீத்து கங்காஸ், பங்கேற்ற 8 சர்வதேச போட்டிகளிலுமே தங்கத்தை மட்டுமே வென்றவர். தற்போது உலக குத்துச்சண்டைப் போட்டியிலும் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
ஸ்வீட்டி பூரா
1993-ல் ஹரியானாவில் பிறந்தவர் ஸ்வீட்டி பூரா. தேசிய அளவிலான பேஸ்கட் பால் வீரராக இருந்த தந்தை மூலம் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர் இவர். 2009 வரை கபடி வீராங்கனையாக இருந்தார்.
அதன் பின் பாக்ஸிங்குக்கு மாறிய அவர், தனது தங்கை சிவி பூராவையும், அதே துறையில் கொண்டு வந்தார். இவர் பங்கேற்ற 5 சர்வதேச போட்டிகளில் 2 வெள்ளி 1 தங்கம் வென்றுள்ளார்.
நிகத் ஜரீன்
நிகத் ஜரீன். 1996-ல் ஆந்திராவின் நிசாமாபாத்தில் பிறந்தவர். 12 வயதில் சண்டையின்போது கண்களில் கருவளையம் போன்று காயத்தழும்பு ஏற்பட்டது. அவரை யாரும் மணம் முடிக்க வரமாட்டார்கள் என திருமண வாய்ப்பு குறித்து உறவினர்கள் முன்வைத்த மோசமான கருத்துகளால் வேதனையடைந்தனர்.
உறவினர் பேச்சைக் கேட்டு அவரது தாய் அடைந்த கவலைகளை ஒதுக்கிவிட்டு, அவருடைய கனவுகளைப் பின்பற்றுமாறு அவரை ஊக்குவித்தார் அவரது தந்தை. பி.ஏ. பட்டதாரியான இவர், ஐதராபாத் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றியவர். 2011 முதல், சர்வதேச போட்டிகளில் 8 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலங்கள் வென்றவர். அடிடாஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார் நிகத் ஜரீன். தற்போது, உலக பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பிரிவில், வியட்நாம் நாட்டின் நியூயன் தி டாம் என்பவரை ஞாயிற்றுக்கிழமை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
லவ்லினா போர்கோஹெய்ன்
1997-ல் அசாமில் பிறந்தவர். தனது மூத்த இரட்டைச் சகோதரிகளின் கிக் பாக்சிங் ஆர்வம் இவரையும் பாக்சிங்கில் ஈடுபடச் செய்தது. பெண்களுக்கு பாக்ஸிங் விளையாட்டு பாதுகாப்பானது அல்ல என்று ஊரில் அனைவரும் கூறியபோது தனது பெற்றோர்கள்தான் தன்னை நம்பினார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சிறு, குறு தொழில் செய்யும் நடுத்தர வகுப்பு தந்தையானாலும், அவர் தன் பெண் குழந்தைகளை விளையாட்டு ஆர்வத்தில் ஊக்குவிக்கத் தவறவில்லை. 8 சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற லவ்லினா, 3 தங்கம் 5 வெண்கலம் வென்றார். உலக பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
தங்க மங்கைகள் நால்வரின் வாழ்விலும் சமூகம் எதிர்த்தாலும், பெற்றோர் துணிந்து அவர்களை நல்வழிப்படுத்தி, உரிய பயிற்சி பெறச் செய்தனர். பேசிய ஊர் வாயில் எல்லாம், வெற்றியையும், இனிப்பையும் கொடுத்து அடைக்க காலங்கள் பல ஆகலாம். ஆனால், கடின உழைப்பும், பயிற்சியும், விடா முயற்சியும் அந்த நாளை விரைவில் கொண்டு வந்து சேர்க்கும். ஒரு பெற்றோருக்கு குழந்தைகளைப் படிக்க வைப்பது மட்டும் கடமையல்ல. தங்களது குழந்தைகளின் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதும் தலையாய கடமை தான். இதனை பல பெற்றோரும் அறியும் வகையில் பகிர்ந்திடுங்கள் நமது “The Karigai” பக்கத்தை. . . .