“காலம் மாறிப்போச்சு” ஸ்டைலில் பொளந்து கட்டும் பெண்கள்

“நா ஒரு நாளைக்கு வேலைக்கு போனா, நீ ஒரு நாளைக்கு வேலைக்கு போ.
நா ஒரு நாளைக்கு துணியை துவச்சா, நீ ஒரு நாளைக்கு துணியை தொவை.” என நடிகை கோவை சரளா வடிவேலுவிடம் மல்லுக்கட்டும் காமெடி காட்சியை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். இதற்கு அந்த “காலம் மாறிப்போச்சு “என்ற படத்தில் கணவனிடம் அடி வாங்கி கொத்தடிமையாக கிடந்த பெண்கள், வேலைக்கு சென்ற சம்பாதிப்பதால் கிடைக்கும் நிதி சுதந்திரத்தை பற்றியும், அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையை பற்றியும் தெளிவாக கூறியிருப்பார்கள். பாலின சமத்துவத்தின் அவசியத்தையும் அந்த படம் உணர்த்தி இருக்கும்.

அப்போது இருந்தோ அல்லது அதற்கு முன்பிருந்தோ பெண்கள் எப்போது பள்ளிக்கூட அறையில் கால் எடுத்து வைக்க ஆரம்பித்தார்களோ, அன்று முதல் அவர்கள் தொட்ட துறைகள் எல்லாம் கோலோச்சி ஆண்களுக்கு பயங்கர டஃப் கொடுக்கும் வகையில் முன்னேறி வருவதை நாமும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பெண்கள் தற்போது வேலை தேடி அப்ளை செய்வது என்பது அதிகரித்து வருவதாக அப்னா.டாட்.காம் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

வேலை தேடுவோர் பயன்படுத்தும் அந்த இணையதளம் வெளியிட்ட தரவுகளின் படி கடந்த 2023 ஆம் ஆண்டு 3 கோடி விண்ணப்பங்கள் அவர்களுக்கு வந்துள்ளன. அதில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெண்கள் மட்டும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெண்கள் வேலை தேடுவது அதிகரித்து வருவதாகவும் அவர்கள் வீட்டிலேயே இருக்க விரும்புவதில்லை, தங்களது கல்வியை பயன்படுத்தி முன்னேறி சம்பாதிக்க வேண்டும், நிதி சுதந்திரத்தோடு வாழ வேண்டும் என்ற மனப்பாங்குக்கு பெரும்பாலானோர் வந்துவிட்டனர் என்று கூறியுள்ளனர்.

கல்வி என்ற ஒற்றை ஆயுதம் அவர்களின் வாழ்வை மிகவும் பயனுள்ளதாக மாற்றி அவர்களை செதுக்கி சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும் என்றும் நம்பிக்கை இதன் மூலம் எழுந்துள்ளது.

குறிப்பாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை கொல்கத்தா உள்ளிட்ட முதல் நிலை நகரங்களில் இருந்து மட்டுமின்றி 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் இருந்து கூட ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அந்த வகையில் கிராமப்புறங்களில் எட்டிய கல்வி அவர்களது வாழ்வில் நல்ல நல்ல நிறுவனங்களில் பணியாற்ற வேண்டிய ஆர்வத்தை தூண்டி இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளனர் இது பெண்களின் வளர்ச்சியில் மைல்கல்லாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE