அடிக்கடி மறதியா? இதோ காரணம்!
மறதி என்பது சாதாரணமாக அனைவருக்கும் வருவதுதான். உதாரணமாக மின்சாரம் கட்டுவதற்கான பில் கட்ட மறந்து போவது முக்கியமான பொருட்களை வைத்த இடம் மறந்து தேடிக் கொண்டே இருப்பது போன்ற விஷயங்கள் சாதாரணமாக தெரியும். ஆனால் அதற்கு பின்னால் சில மருத்துவ ரீதியான காரணங்களும் இருக்கலாம் என்பதை த காரிகையின் கட்டுரையில் பார்க்கலாம்
வைட்டமின் பி12 குறைபாடு
உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் அதிக முக்கிய பங்கு வகிப்பது வைட்டமின் பி12. இதன் அளவு குறைவது, சோர்வு, பலவீனம் போன்றவை நினைவாற்றல் இழப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று ஒரு சில ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.
ரத்தம் உறைதல்
சிதைந்து போன ரத்த நாளங்களில் மூளைக்கான இரத்த விநியோகம் பாதிக்கப்பட கூடும். இதனால் ஞாபகம் மறதி, குழப்பம் மற்றும் நடத்தையில் மாற்றம் போன்ற விளைவுகள் தூண்டப்பட வாய்ப்புள்ளது. ஒரு இடத்துக்கு சென்று விட்டு எதற்காக அங்கு வந்தோம் என யோசிப்பது போன்ற விஷயங்கள் பின்வரும் மூளை நரம்பியல் பிரச்னைகளின் முன்னெச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தைராய்டு
மூளை வளர்ச்சிக்கு தைராய்டு சுரப்பிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே தைராய்டு சுரப்பிகள் நிலையற்ற நிலையில் இருப்பதும் நினைவாற்றல் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சிறுநீரகப் பிரச்சினை
பொதுவாக சிறுநீரக பிரச்சனையின் ஆரம்ப கட்டத்தில் எல்லாம் நினைவு இழப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அதுவே ஹீமோ டயாலிசிஸ் போன்ற தீவிர சிகிச்சைகளை செய்து கொள்ளும் போது ஞாபக மறதி பிரச்சனை ஏற்படக்கூடும். குடும்பத்தினர் உற்றார், உறவினர் நண்பர்கள் என அனைவரையுமே மறந்து விடும் நிலையும் ஏற்படக்கூடும்.
மதுபானம்
மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி அதிக அளவு மதுபானம் அருந்துவதும் மறதிக்கும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது நரம்பு செல்களை அழித்து நினைவாற்றல் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
தலையில் காயம்
தலையில் காயமோ அல்லது தீவிரமான அடியோ படும்போது நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம். இந்த பிரச்சனை ஒரு சில மணி நேரம் சில நாட்கள் சில வாரங்கள் பல வருடங்கள் கூட நீடிக்க வாய்ப்புள்ளது.
கல்லீரல் கோளாறு
ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத காரணங்களால் கூட கல்லீரல் அலர்ஜி ஏற்படுவதும் நினைவாற்றல் இழப்புக்கு காரணமாகும். ஆனால், இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மாத்திரைகள்
தூக்க மாத்திரை, மனச்சோர்வு, மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் போது சற்று நினைவாற்றல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் நினைவாற்றல் பிரச்சனை, அடிக்கடி மறதியை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.