பெண்களுக்கு மீசை வளராமல் தடுக்க இதப்பண்ணுங்க!
ஆண்களுக்கு மீசை அழகு. அதுவே பெண்களுக்கு மீசை முளைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கும். இதனைத் தடுக்க பல பெண்களும் பியூட்டி பார்லர் சென்று திரெட்டிங், வேக்சிங் செய்வார்கள். ஆனால், எத்தனை நாட்களுக்குத்தான் அப்படியே செய்து கொண்டிருக்க முடியும்? அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டுமல்லவா? அந்தத் தீர்வை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கையாகவும், மிகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்பதை உங்களுக்கு விளக்குகிறது த காரிகை.
பெண்களுக்கு ஆண்களைப் போன்றே மீசை வளருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பது தான். எனவே, அதனைத் தடுக்க இயற்கை முறையில் பல்வேறு பலன்தரும் வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அவை பின்வருமாறு
பப்பாளி – மஞ்சள் மாஸ்க்
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள் உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். பப்பாளி காயை அரைத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்யவேண்டும். பின், அதனை, உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால், உடனே உதட்டுக்கு மேல் உள்ள முடி உதிராது. மாறாக, முடி வளர்வது ஒரு கட்டத்தில் நின்றுவிடும்.
புதினா டீ
புதினா டீயை தொடர்ந்து குடித்து வந்தால், அது வேகமாக முடி வளர்வதைக் குறைக்க உதவும் என நம்பப்படுகிறது. எனவே, நீங்கள் டீ குடிக்கும் போதெல்லாம் ஓரிரு புதினா இலைகளைக் கிள்ளி போட்டு குடித்து பாருங்கள். ஏனெனில் புதினாவில் ஆன்டி-ஆன்ட்ரோஜெனிக் பண்புகள் முடியின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஹார்மோன்களின் சுரப்பை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.
கடலை மாவு மாஸ்க்
முகத்தில் முடி, உதட்டிற்கு மேல் முடியின் வளர்ச்சியைத் தடுக்க கடலை மாவு மாஸ்க்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு கிண்ணியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி நன்கு காய வைக்கவும். உலர்ந்ததும், நீரில் நனைத்த கையால் மேல் நோக்கி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முடியின் வளர்ச்சி குறையும். அத்துடன், சருமத் துளைகளில் உள்ள அழுக்கு, இறந்த செல்கள் உள்ளிட்டவை வெளியேற்றப்படும்.
மஞ்சள் மற்றும் பால்
இது அனைவருக்கும் தெரிந்த டிப்ஸ்தான் என்றாலும், அதை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. அப்படிப்பட்ட மஞ்சளை ஒரு கிண்ணியில் எடுத்துக் கொள்ளுங்கள். பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை உதட்டிற்கு மேலே முடி வளரும் இடங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், பெண்களின் தேவையற்ற முடியின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.