பழங்குடியின முதல் குடியரசு தலைவர் : திரௌபதி முர்மு

நாட்டின் 15 வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு(64) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தனது கடின உழைப்பால் தற்போது குடியரசு தலைவராக உயர்ந்துள்ளார். அவர் கடந்த வந்த வெற்றி பாதையை பற்றி பார்க்கலாம்.

படிப்பும் அரசியல் பயணமும் :

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி என்கிற சின்னஞ்சிறிய கிராமத்தில் 1958ம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்மு, சந்தல் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1979ல் புவனேஸ்வர் ரமாதேவி கல்லூரியில் பி.ஏ.பட்டப்படிப்பை முடித்த பின்பு நுர் அரசு ஊழியர், ஆசிரியர், பேராசிரியராக தனது பணியை மாணவர்களுடன் செலவிட்டு வந்தார் முர்மு. சிறு வயதில் இருந்தே அரசியல் மீது இருந்த ஆர்வத்தால், 1997 ல் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார் திரௌபதி முர்மு. கட்சியில் சேர்ந்த அதே ஆண்டில், ராய்ரங்பூர் கவுன்சிலர் தேர்தலில் களம் கண்டு வெற்றியும் பெற்றார். உழைப்பை மட்டுமே நம்பி இருந்த திரௌபதி முர்மு, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ராய்ரங்பூர் தொகுயின் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

அதற்கு அடுத்த ஒடிசா அமைச்சரவையில், 2 ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சராகவும், 2 ஆண்டுகள் மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் முர்மு. தனக்கு வழங்கப்பட்ட துறைகளிலும், தன்னுடைய தொகுதிகளிளும் சிறப்பாக பணியாற்றியதற்காக ஒடிசா மாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நீலகண்டன் விருது திரொபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது. அரசியல் களத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்த திரொளபதி முர்முவுக்கு அடுத்ததாக, பாஜகவின் பழங்குடியின அமைப்பின் துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. 2015ல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர்கவும், நாட்டின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் ஆளுநர் என்ற பெருமையுடன்
ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார் திரௌபதி முர்மு. இவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல், 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த பிறகும், பதவியில் இருந்து நீக்கப்படாமல் 6 ஆண்டுகள் 1 மாதம் 18 நாட்கள் வரை ஆளுநர் பதவி வகித்தார்.

பாஜக வின் கோப்புகளை ஏற்க மறுப்பு :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக இருந்த போது ஆளும் கட்சி, எதிர்கட்சி என இருதரப்புக்கும் விருப்பமானவராகவே திரௌபதி முர்மு இருந்தார். அப்போது பாஜக தலைமையிலான ரகுபர் தாஸ் ஆட்சியில் இருந்தது.

பழங்குடியினரின் நிலங்களைப் பாதுகாக்க ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (சிஎன்டி சட்டம்) மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (எஸ்பிடி சட்டம்) ஆகியவற்றின் சில விதிகளைத் திருத்த அந்த அரசு முன்மொழிந்தது.

எதிர்க்கட்சிகளின் கூச்சல் மற்றும் வெளிநடப்புக்கு மத்தியில், ரகுபர் தாஸ் அரசு அந்த திருத்த மசோதாவை ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. தான் இருக்கும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சிறிதும் தயக்கமின்றி, பழங்குடியினருக்கு இதனால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பி, அந்த மசோதாவுக்கு கையெழுத்திடாமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார் முர்மு. அதற்கு அரசால் பதில் சொல்ல முடியவில்லை, எனவே அந்த மசோதா, சட்ட வடிவம் பெறாமல் இருந்தது.

சொந்த வாழ்க்கை :

அரசியலில் திரௌபதி முர்மு வெற்றியை சுவைத்திருந்தாலும், அவரது குடும்ப வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. 2014ம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி கணவர் சியாம் சரன் முர்மு உயிரிழக்க, அதற்கு அடுத்த பேரிடியாக 2 மகன்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டனர். மகள் இதிஸ்ரீ முர்மு மட்டுமே தனது குடும்பத்தினருடன் ராஞ்சியில் வசித்து வருகிறார்.

குடியரசு தலைவர் :

2017 ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலின் போதே குடியரசு வேட்பாளருக்கான பெயர் பரிந்துரைப் பட்டியலில் திரௌபதி முர்முவின் பெயர் அதிகம் இடம் பிடித்திருந்தது. இறுதியில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை தனது வேட்பாளராக பாஜக நிறுத்தியது.

காத்திருந்தது வீண் போகவில்லை என்பது போல, தற்போது ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் கண்டார். இருமுனைப் போட்டியாக உருவாகி இருந்த குடியசு தலைவர் தேர்தல் போட்டியின் இறுதியில் திரௌபதி முர்மு வெற்றி வாகை சூடியுள்ளார். இதன் மூலம் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல் முறையாக குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் பதவிக்கு, பிரதீபா பாட்டிலுக்கு பிறகு இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Instagram
YOUTUBE