வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் என்பது பலருக்கும் கவலை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது.

எத்தனையோ நாட்கள் நம்மை பாதுகாப்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல உதவியாக வாகனங்கள் இருந்தாலும், அவை நீரில் மூழ்கி இருப்பதை காணவே சில நேரங்களில் கவலையாக தான் இருக்கும்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும், ஒரு சில இடங்களில் நீர்நிலை உடைப்பாலும் பல கார்கள் முழுமையாக மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் சிக்கின. ஒரு சில கார்கள் காகிதக் கப்பல் ஓடையில் மிதப்பது போல் மிதந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

ஜன்னல் வழியாக பார்க்கிங்க்குள் இருக்கும் கார்களும், பைக்குகளும் எங்கோ இழுத்துச் சொல்லப்படுவதை காணும் போது அது நமது வாகனமாக இருக்கக் கூடாது என பலரும் நினைத்து பதறியிருப்பார்கள். ஆனால் தாழ்வான பகுதிகளில் இருந்த பெரும்பாலான வண்டிகள் தப்பிக்கவில்லை என்பதே கசப்பான நிதர்சனம்.

ஒரு சிலர் வேளச்சேரி போன்ற இடங்களில் மேம்பாலத்தில் கார்களையும், பைக்குளையும் இருமருங்கிலும் பார்க் செய்து விட்டு தங்களது வாகனங்களை காப்பாற்றிக் கொண்டனர். ஆனால் இந்த வாய்ப்பானது பலருக்கும் இல்லாமல் போனதால் வாகனங்களை வெள்ளத்தில் தொலைத்துவிட்டும், அதனை ரிப்பேர் செய்யவும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

பொதுவாக இரு சக்கர வாகனங்கள் இத்தகைய வெள்ளத்தில் சிக்கினால் அவற்றை 2 நாட்களுக்குள் மெக்கானிக்கை அழைத்து வண்டியில் உள்ள தண்ணீரை டிரெயின் செய்து சரி செய்தால் எளிமையாக இயக்கி விடலாம். ஆனால் கார்கள் அப்படி அல்ல.

கார்களைப் பொறுத்தவரை அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. இதே வழிமுறைகள் தான் கமர்சியல் என்ற வணிக ரீதியிலாக பயன்படுத்தப்படும் 3 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.

உங்களது கார் ஒரு வேலை வெள்ளத்தில் சிக்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது கார் மெக்கானிக் நவீன் தெளிவுபடுத்தினார். அவை பின்வருமாறு

வெள்ளத்தில் இருந்த காரின் எஞ்சினை ஒருபோதும் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கவே கூடாது.

என்ஜினுக்குள் நீர் புகாவிட்டாலும் பிற பகுதிகளில் இருந்த தண்ணீர் ஆனது என்ஜினை ஸ்டார்ட் செய்த பின்னர் எஞ்சினுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.

அப்படி காரின் எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அது ஹைட்ரோ லாக் ஆகிவிடும். இத்தகைய கார்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பெரும்பாலும் கவர் செய்யப்பட மாட்டாது.

உங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியில் Add on என்ற கூடுதல் பாலிசியாக என்ஜின் ப்ரொடக்ஷன் என்ற என்ஜின் பாதுகாப்புக்கு இன்ஷூரன்ஸ் செய்திருக்காவிட்டால், ஹைட்ரோ லாக் ஆனது இன்சூரன்சால் கவர் வெய்யப்படாது.

மேலும் எஞ்சின் ரிப்பேர் செய்வதற்கான பணமும் அதிக அளவு செலவாகும்.

அது நீங்கள் வைத்திருக்கக் கூடிய காரின் ஒட்டுமொத்த மதிப்பை விட அதிகளவு வரும் எனில், அந்த காரை அழித்து ரீசைக்கிள் செய்து காயலான் கடையில் போடக்கூடிய நிலை உருவாகி விடலாம்.

”எப்படி உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை செலுத்தும் முக்கிய உறுப்பாக இதயம் உள்ளதோ அதேபோன்று ஒரு காரின் அனைத்து பாகங்களுக்கும் தேவையான எரிசக்தியை வழங்கும் இதயம் போன்ற ஒரு முக்கியமான பாகம்தான் எஞ்சின். எனவே அந்த இன்ஜினை பாதுகாக்க ஒருபோதும் வெள்ளம் பாதித்த காரை ஆன் செய்ய முயற்சிக்கவே வேண்டாம்” என மெக்கானிக் நவீன் கேட்டுக் கொண்டார்.

மழை நீரில் காரை எப்படி ஓட்ட வேண்டும்

ஒருவேளை காரை நீங்கள் மழை நீரில் இயக்கிச்சென்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தால் அதனை எப்படி இயக்க வேண்டும் என பார்ப்போம்.

பெரும்பாலும் காரை மழை வெள்ளம் தேங்கிய இடத்தில் இயக்கிக் கொண்டு செல்லக்கூடாது

ஒருவேளை மிக அவசரமான சூழலில் ஓரிடத்திற்கு செல்ல காரை பயன்படுத்தியாக வேண்டும் என்ற சூழல் இருந்தால், நீங்கள் கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் இடத்தில் நீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சாலையில் தேங்கியுள்ள நீரின் அளவானது காரின் பம்பருக்கு கீழேயோ அல்லது காரின் காற்று உள்நுழையும் பகுதிக்கு கீழேயோ இருந்தால் மட்டுமே அந்த இடத்தில் காரை இயக்கிச் சொல்லலாம்.

காரை குறைவான வேகத்தில் தான் இயக்கிச் செல்ல வேண்டும்.

ஏனெனில் நீருக்கு உள்ளே காரை இயக்கி செல்லும்போது, கண்ணுக்குத் தெரியாத இடையூறுகளோ தடையோ ஏதும் மழை நீருக்குள் கிடக்கலாம். அது காரின் பாகங்களை டேமேஜ் செய்ய வாய்ப்பு உண்டு.

காரை மிக குறைவான கியரில் மட்டும்தான் இயக்க வேண்டும்.

காரின் வேகம் குறைவாகவும் நிதானமாகவும் சீராகவும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு பின்பு அதனை இயக்க முயற்சிக்கக் கூடாது.

காரை எங்கும் நிறுத்தாமல் சீரான வேகத்தில் சில கிலோமீட்டர் வரை இயக்கிச் செல்லலாம்.

காரை சீரான வேகத்தில் இயக்கி செல்லும்போது காருக்கு முன்னால் வில் போன்ற ஒரு வளைவான நீர் அலை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

காரின் வேகம் குறையும்போது நீருக்கு எதிர் திசையில் அந்த அலைக்கு எதிரான அழுத்தம் குறைந்து அது காருக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது.

காரை அவ்வாறு நீரில் இயக்கிச் செல்லும்போது காரின் ஜன்னல்களை இறக்கி விட வேண்டும். சைல்ட் லாக் போடக்கூடாது.

ஏனெனில் காரின் எலக்ட்ரானிக் பாகங்கள் பழுதாகிவிட்டால் காரின் ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கவோ, கதவை திறந்து வெளியே தப்பிக்கவோ வாய்ப்பு இல்லாமல் போய்விடும். கவனம்.

வெள்ளத்தில் சிக்கிய காரை எப்படி எடுப்பது? எப்படி சுத்தம் செய்வது? எப்படி பராமரிப்பது என்ற தொடர்ச்சியைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE