வெயில் காலத்துல என்னெல்லாம் செய்யக்கூடாது?
பொதுவாக வெயில் காலத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவே அஞ்சும் நிலை தான் இருக்கும். சற்று நேரம் வெயிலில் நடந்தாலும் இரு சக்கர வாகனத்தில் அல்லது திறந்த வெளியில் பயணித்தாலும், தலை சுற்றல் ஏற்படுபவர்களும் உண்டு. இது மரணம் வரை கூட இட்டுச் செல்லும் ஆபத்தான வெயில் காலமாகும்.
அத்தகைய கொடூரமான வெயில் மக்களை கொளுத்தி எடுக்கும் நிலையில், இந்த காலகட்டத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது? என்ற ஒரு பட்டியலே உள்ளது. அதில் பெரும்பாலானவற்றை, நீங்கள் இதுவரை அறிந்திருக்க மாட்டீர்கள் இந்த கட்டுரை அதற்கு உதவும்.
- வெளியே செல்லக்கூடாது
வெயில் காலத்தில் வெளியவே செல்லக்கூடாது என்றால் பிழைப்பு நடப்பது எப்படி? என்று கேட்கலாம். ஆனால், அதற்கென குறிப்பிட்ட காலம் உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அடிக்க கூடிய வெயில் மிகவும் மோசமானதாக இருக்கும். அப்படியே சென்றாலும் மறக்காமல் தண்ணீர் பாட்டிலையும், குடையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். போதிய இடைவெளியில் நீரை பருகிக் கொண்டிருந்தால், அதீத தாக்கத்திலிருந்து தப்பலாம்
- காரமான உணவு
வெயில் காலத்தில் அதிக காரம் மிக்க உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இது, தெர்மோஜெனிக் என்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உணவு குளிர்பானங்களால் கிடைக்கும் குளிர்ச்சியை இது தடுக்கலாம். மட்டுமின்றி புரோட்டின் அதிகம் நிறைந்த உணவுகள், பழைய உணவுகள், மீதமான உணவுகள், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
- காபி, டீ தவிர்க்கலாம்
காபி, டீ, ஆல்கஹால், சாப்ட் டிரிங்க்ஸ் போன்ற உணவு வகைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது, உடலில் ஏற்கனவே உள்ள வறட்சியை மேலும் அதிகரிக்க கூடும். எனவே வெயில் காலத்தில் காபி டீ பருகுவதற்கு பதில் மோர் குடிக்கலாம். அல்லது இளநீர் பருகி உடலின் நீரேற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
- இறுக்கமான ஆடைகள்
வெயில் காலத்தில் இலகுவான காட்டன் ஆடைகளை அணிவது உகந்தது. இது, எளிதில் வியர்வையை உறிஞ்சி விடும். ஆனால், இறுக்கமான ஆடைகளை அணியும் போது, வியர்வை வெளியேற வாய்ப்பின்றி வியர்வை கட்டிகள் உருவாக கூடும். மேலும் அடர் நிற ஆடைகளை அணியாமல் வெளிர் நிற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் போது அது சூரிய வெப்பத்தை எதிரொலிக்கும்.
- பாதுகாப்பு அவசியம்
வெயில் அதிகம் உடலில் படாதவாறு கை கால்களுக்கு உறை அணியலாம். முகம் மறைக்கும் ஸ்கார்ஃப் அணியலாம். அத்துடன் தலையை மறைக்கும் வகையில் தொப்பி அணிந்து செல்லலாம். மதிய வேளையில் குடை பிடித்தபடி சென்றாலும் இந்த வகையில் இருந்து தப்பிக்கலாம்.
- உடற்பயிற்சி
வெயில் அதிகமாக இருக்கும் போது கடுமையான உடற்பயிற்சி செய்கையில் அதிக வியர்வை வெளியேறும். ஏற்கனவே நீர் பற்றாக்குறை உடலில் நிலவும் போது, வறட்சி அதிகரித்து, உடலில் ரத்த ஓட்டம் பாதித்து, உயிர் இழக்க கூடிய அபாயத்தை இது ஏற்படுத்தும். எனவே அதிக சிரத்தை மேற்கொண்டு, கடுமையான உடற்பயிற்சி செய்வதை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டும்.
- கார்களில் குழந்தைகள்
வெயில் அதிகம் இருக்கும் காலத்தில் குழந்தைகளை அல்லது செல்லப் பிராணிகளை பார்க்கிங்கள் நிறுத்தியுள்ள கார்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது. இது ஏற்கனவே இரும்பு கூடு போல் உள்ள ஒரு காரின் உட்புறத்தில் அதிக வெப்பத்தை கிரகிக்கும். வெப்ப அலையின் தாக்கத்தால் அவர்களது உயிரைப் பறிக்கக் கூடிய அசம்பாவிதம் கூட நிகழ வாய்ப்புண்டு. எனவே மதிய வேளையில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லவோ, விளையாடவோ அனுமதிக்காததலும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களில் நீண்ட நேரம் அவர்களை தனியே அமர வைப்பதும் மிகவும் ஆபத்தான விஷயமாக அமையலாம்.
- ஹைட்ரேட்டட் ஆக இருக்க வேண்டியது அவசியம்
வெயில் காலத்தில் வெறும் தண்ணீர் மட்டும் பத்தாது. மோர், லஸ்ஸி, எலுமிச்சை ஜூஸ், அதிக நீர் சத்து மிக்க பழ ஜூஸ் உள்ளிட்டவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். வெப்ப அலையின் காரணமாக மயக்கமாக உணர்ந்தாலோ, தலை சுற்றல் அல்லது உடல்நிலை சரியில்லை என தோன்றினாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள “த காரிகை“-யின் சமூக வலைதளப் பக்கங்களை பின் தொடருங்கள்.