திருமணத்துக்கு முன் என்னவெல்லாம் பேசியாக வேண்டும்?

ஆரோக்கியமான திருமணத்துக்கு இருவருக்குள்ளும் ஒரே வைப் அல்லது மனதளவில் சிங்க் ஆவது அவசியம். அன்பு காதல் என்பது ஒரு உறவின் மிக முக்கியமான ஒன்றாகும். சாப்பாட்டில் உள்ள உப்பு போல அது இல்லாவிட்டால் வாழ்க்கை ருசிக்காது. ஆனால், வெறும் அன்பு, காதல் மட்டுமே போதுமா? என்றால் அது ஒரு சில நேரம் கேள்விக்குரியதாகிவிடும். பிறரின் விருப்பங்களை மதிப்பது, அவர்களின் எதிர்கால லட்சியங்கள், தேவைகள் என்னென்ன? இருவருக்கும் ஒத்துப் போகிறதா? மரியாதையை காப்பாற்றுவது, உண்மையாக இருப்பது உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை திருமணத்திற்கு முன்பே பேசுவது நலம்.

பல நேரங்களில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஜோடிகள் தங்களுக்குள் திருமணத்துக்கு முந்தைய பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பதாக தெரபிஸ்ட் ஜோர்டன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் வாழ்க்கை முழுக்க கமிட்மென்ட் கொடுத்து இருவரும் அவரவர் விருப்பங்களையும் வெறுப்புகளையும் தெரிந்து கொண்டு தொடர்ந்து பயணிக்க பேச்சுவார்த்தைதான் அச்சாணி என்று கூறியுள்ளார். திருமணம் செய்து கொண்ட பின்னர், “முன்பே தெரிந்திருக்கலாம்” என்ற வார்த்தையை பல தோல்வியுற்ற திருமணங்களில் கேட்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். எனவே எந்தெந்த விஷயங்களை பற்றி முன்கூட்டியே தங்களது இணைக்குள் பேசி தீர்வு காண வேண்டும் என்பதை ‘த காரிகை’யின் சிறப்பு கட்டுரையில் தற்போது பார்க்கலாம்.

நியாய தர்மங்கள்

நியாயம் தர்மம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். அது எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் ஆமோதிக்கும் கருத்தும் – எதிர் கருத்தும் இருக்கும். எனவே, தமக்கு இணையான அல்லது தமக்கு பொருத்தமான ஜோடிதானா? என்பதை முதலில் அறிந்து கொள்ள இருவருக்கும் பேச்சுவார்த்தை நடப்பது அவசியமாகிறது. ஒரு சில விஷயங்கள் பேரம் பேசியோ, சமாதானப்படுத்தியோ சீராகாது. உதாரணத்திற்கு ஒரு மதம் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது இனம், மொழி, பின்பற்றும் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்தோ இருவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் உள்ளதா ?என்பதை கேட்டுக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எங்கு வாழவேண்டும்? யார் யார்? உடன் இருப்பார்கள் நம்முடைய நம்பிக்கைகள் என்னென்ன? என்பதை திருமணத்திற்கு முன்பே பேசி தெரிந்து கொள்ள வேண்டும்.

பேசும் இயல்பு

ஒவ்வொரு நபருக்கும் பிறருடன் தொடர்பு கொண்டு பேசும் முறை வித்தியாசப்படும். ஒரு பிரச்சினையை தீர்ப்பதாகட்டும் அல்லது திறமையை பயன்படுத்தி செயல்திட்டங்களை வழி வகுப்பதாகட்டும் அல்லது நாள்தோறும் நடக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்வதாகட்டும். ஒவ்வொரு கம்யூனிகேஷனும் வித்தியாசப்படும். அதைப்போல் இருவரும் மிக சகஜமாக தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனரா அல்லது ஐஸ் பிரேக்கிங் நடக்காமலேயே இன்னும் மனம் ஒத்துப் போகாமல் 3-ம் நபர் போல பேசிக் கொள்கின்றனரா? எனப் பார்க்க வேண்டும்.

நெருக்கம்

நெருக்கமான வாழ்வு பற்றியும் அதில் சவுகரியம், அசவுகரிங்கள் பற்றியும் முன்கூட்டியே பேசி தெரிந்து கொள்வது நல்லது.

பணம்

திருமணத்துக்கு முன்பே பணத்தைப் பற்றி பேசுவதா? என்று தயங்க கூடாது. திருமணத்துக்கு ஆகட்டும் அல்லது திருமணத்திற்கு பின்பு நடைபெறும் வாழ்க்கையாகட்டும் இரண்டுக்குமே பணம் அத்தியாவசியமான ஒன்று. பணத்தை தன்னுடைய இணை எப்படி பார்க்கிறார்? அவருடைய செலவு செய்யும் குணாதிசயம் எப்படி? சேமிக்கும் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை முன்கூட்டியே பேசி தெரிந்து கொள்ள வேண்டும்.

குடும்பம்

திருமணத்தின் அடிப்படையே இருவரது குடும்பங்கள் மனம் ஒத்து நிம்மதியாக சந்தோஷமாக நடத்துவது தான். ஆனால் வாழ்க்கை முழுக்கவும் இரு குடும்பங்களும் அதே போன்ற சந்தோஷத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒத்துப் போகிறதா? அவர்கள் சரிவர தங்களுக்குள் தொடர்புகளை மேற்கொண்டு இருக்கிறார்களா? என்பதை திருமணத்திற்கு முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மதம் மற்றும் நம்பிக்கை

ஆன்மீகமாகட்டும். நம்பிக்கை ஆகட்டும். ஒவ்வொரு தனி நபருக்கும் ஒவ்வொரு பின்பற்றுதல் இருக்கலாம். அதை பிறருக்கு திணிக்கவோ இல்லை அதைத்தான் பின்பற்ற வேண்டும், இதை பின்பற்றக் கூடாது என்று கருத்துக்களை கூறவும் அனுமதிக்கிறாரா? அல்லது சுதந்திரமாக விடுகிறாரா? என்பதை திருமணத்திற்கு முன்பே பேசிக் கொள்வது நல்லது.

திருமணத்துக்கு முன்பு மணிக்கணக்கில் பேசினாலும் இது போன்ற விஷயங்களை பேசாது வாழ்க்கையில் ஒரு பிடிமானம் கிடைக்காது. திருமணத்திற்கு பின்பு நடைபெறும் வாழ்க்கையில் அன்பு காதல் மட்டும் இன்றி இத்தகைய விஷயங்களும் பந்தத்தை பாதிக்கும் காரணிகளாக இருந்திடக் கூடாது. இது தங்களுக்கு தாங்களே தங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

திருமண பந்தத்துக்குள் அன்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல் பேச்சுவார்த்தை என்பது மிகவும் முக்கியம். அதை குறைத்து மதிப்பிடக் கூடாது.

இதுபோன்ற தகவல்களை அறிய த காரிகையின் சமூகவலைதளங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE