இனி இதப்பாக்காம நகை வாங்கி ஏமாந்துடாதீங்க!
கடைக்காரங்க எவ்ளோ கன்வைன்ஸ் பண்ணாலும், HUID 6 இலக்க எண் இல்லாத நகைய வாங்கிடாதீங்க!
ஏப்ரல் 1,2023 முதல் HUID என்ற ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த முத்திரை இல்லாமல் நகைகளை விற்கக் கூடாது என்றும் நகைக் கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அது என்ன முத்திரை? எதனால் இது கட்டாயமாக்கப்பட்டது? இதனால் கிடைக்கும் பலன் என்ன? பழைய நகைகளின் நிலை என்ன? என்பதை தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
இந்த அறிவிப்பு நுகர்வோரின் நிதிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருந்தாலும், ஏற்கெனவே நிறைய பழைய நகைகளை வைத்திருப்போர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக HUID முத்திரை இல்லாமல் நாம் ஏற்கெனவே வீடுகளில் வைத்திருக்கும் நகைகள் மதிப்பிழந்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹால்மார்க் என்றால் என்ன?
தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்ய HUID ஹால்மார்க் முத்திரை பயன்படுகிறது. இது 6 இலக்க எண் கொண்ட குறியீடு ஆகும். நகைகள், அதன் தரத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்ற மதிப்பை இது வழங்குகிறது. அத்துடன், கடின உழைப்பில் சேர்த்த காசைக் கொட்டிக் கொடுத்து நகை வாங்கும் வாடிக்கையாளருக்கும் இந்த ஹால்மார்க் முத்திரையை பார்த்து வாங்கும் போது ஒரு வித நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.
எதற்காக HUID ஹால்மார்க் அவசியம்?
இந்திய தர நிர்ணய ஆணையமான BIS தங்கத்தின் தூய்மையையும், தரத்தையும் இதில் மதிப்பிடுகிறது. மக்கள் வாங்கும் தங்கம், உண்மையிலேயே தரமானதா? அல்லது கலப்படம் கலந்ததா என இந்த முத்திரை மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வாங்கும் நகைகளில் இந்த முத்திரை இல்லாவிட்டால் தரம் குறைந்த நகையை உங்கள் தலையில் கட்டப் பார்ப்பதாக அர்த்தமாகிவிடும். பின்நாளில் HUID முத்திரையுள்ள நகையை விட குறைந்த மதிப்புடனேயே அது கணக்கிடப்படும்.
தூய தங்கம் ஆபரணமாகாது
எப்போதுமே, 24 காரட் தூய தங்கத்தை மட்டும் வைத்து ஒரு அழகிய வடிவமாகவோ, ஆபரணமாகவோ செய்ய முடியாது. அதில், செம்பு உள்ளிட்டவற்றைக் கலந்தே ஆபரணமாக மாற்ற முடியும். அந்த வகையில், எந்தப் பொருள் எவ்வளவு கலக்கப்பட்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே BIS, HUID 6 இலக்க எண் உள்ளிட்டவை நிர்ணயமாகிறது.
ஆபரணத்தில், எவ்வளவு தங்கம் இருக்கும்?
91.6% தங்கம் உள்ள 22 காரட் நகையை 916 ஆபரணத் தங்கம் என அழைக்கிறோம். அதுவே 750 என இந்தால் அது பழைய தங்கத்தைக் குறிக்கும். 18 காரட் என்றே அதன் மதிப்பு நிர்ணயமாகும். இதேபோல், 14 காரட் ஆபரணத்தில் 58.5% தங்கம் மட்டுமே இருக்கும்.
எனவே, நீங்கள் வாங்கும் தங்கத்தில் BIS, 916, HUID உள்ளிட்டவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். இல்லாவிட்டால், அது விற்கப்படும் போது பழைய தங்கத்துக்கான நகை விலைக்கே விற்கப்பட வாய்ப்புள்ளது. கடைக்காரர்கள் எவ்வளவுதான் பேசி கன்வைன்ஸ் பண்ணாலும், இதில் சமாதானம் அடைய வேண்டாம். காரணம், நாளை அதே கடையில் விற்றாலும், இதெல்லாம் பழைய தங்கம் என ஒரே வார்த்தையில் கூறி, அன்றைய மார்கெட் ரேட்டை விட பலமடங்கு குறைத்து பணம் தரக் கூடும். தங்கத்தை வாங்குவோர், பெரும்பாலும் நீண்ட காலத்துக்குப் பின்பே அவற்றை விற்பார்கள். எனவே, அந்த விதிகள் எல்லாம் பழையதாகி முதலீடு செய்த பணத்தில் ஒரு பகுதியை விழிப்புணர்வு இன்மையால் இழக்க நேரிடும். புதிதாக நகை வாங்குவோரிடமும், “The Karigai”-யின் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கைத் தகவலைப் பகிருங்கள்.