புற்றுநோய் பயம்! திவாலான டப்பர்வேர்!
‘ஏய்! அவ டப்பர் வேர் பாக்ஸ் ல லஞ்ச் கொண்டு வந்திருக்கா டி” என ஆச்சரியமாக சொன்னதை சிலர் கேட்டு இருப்பார்கள். இப்படித்தான் தொடங்கியது டப்பர் வேர் மீதான மக்களின் மோகம்.
ஒரு காலத்தில் டப்பர் வேர் பாக்ஸை அலுவலகத்திலோ, பள்ளி, கல்லூரிகளிலோ கொண்டு வருபவர்கள் மிகவும் அந்தஸ்தில் உயர்ந்தவர்களாக மாடர்ன் வாழ்க்கை வாழ்பவர்களாக பார்க்கப்பட்டனர் .
பாரம்பரியமாக தூக்குப்போசிகளில், வாழை மட்டை மற்றும் இலைகளில் உணவு கொண்டு சென்று சாப்பிட்டவர்கள், பின்பு எவர் சில்வர் லஞ்ச் டப்பாக்களை எடுத்துச் சென்றனர்.
அது நாகரீகமாக பார்க்கப்பட்டது. திறக்க முடியாத லஞ்ச் டப்பாக்களை வாயில் கடித்து திறந்து சாப்பிடுவார்கள்.
இது எல்லாம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. டப்பர் வேர் வரும் வரை.
யார் இந்த டப்பர் வேர்?
78 வருடங்களாக செயல்பட்டு வரும் டப்பர்வேர் நிறுவனம், உணவுப் பொருள் வைக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் தயாரிப்புக்கு பேர்போனது. 1940களில் ஏர்டைட் கண்டெய்னர்கள் ஏர்ல் நிறுவனத்தால் காப்புரிமை பெற்று விற்பனைக்கு வந்தது. அதிலும் நீண்ட நேரம் கெட்டுப் போகாத உணவை பதப்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கோடு அறிமுகமானது தான் டப்பர் வேர்.
குளிர்சாதன பெட்டிகளை வாங்க இயலாதவர்கள் அல்லது வெளி, பணியிட சூழல்களால் அதனை பயன்படுத்த முடியாதவர்கள் உணவை கெட்டுப் போகாமல் இருக்க செய்வதற்காக டப்பர்வேர் பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கினர்.
இது சில பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பிரபலமானது.
உயர் மிடில் கிளாஸ் ரகத்தைச் சேர்ந்த மக்கள் வாங்கி பயன்படுத்தும் நிலையில் வழக்கமான டிபன் பாக்ஸ்களை சில்வரிலேயே பயன்படுத்தி வந்த சில மிடில் கிளாஸ் மக்களும் அதன் நிறம், வண்ணம், நவீனத்துவம், அழகு, அதை பயன்படுத்தும் போது வரும் அந்தஸ்து ஆகியவற்றை பார்த்து தாங்களும் வாங்கி பயன்படுத்த நினைத்தனர். இதை அடுத்து பெண்களே இந்த டிபன் பாக்ஸ்களை விற்பனை செய்ய குழுக்களாக அமைந்து செயல்பட்டனர்.
இப்படியாக லஞ்ச் பேக், சமையலறை ஃப்ரிட்ஜ் என பல இடங்களையும் சம்படங்கள் எவர்சில்வர் டப்பாக்களுக்கு மாற்றாக ஆக்கிரமித்து வந்தது டப்பர்வேர்.
இதில் ஒரு சிலவற்றை மைக்ரோவேவ் அவனிலும் பயன்படுத்தி சூடு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மோகம் குறைய என்ன காரணம்?
டப்பர்வேர் டப்பாக்கள் என்னதான் ஸ்டைலாக இருந்தாலும் ஆரோக்கியத்துக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என மக்கள் நிரூபித்து விட்டனர்.
பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் வைத்து உணவை சூடு செய்து சாப்பிட்டாலும் அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவுப் பொருள்களை வைத்து சாப்பிட்டாலோ புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் வந்து விடும் என்று அறிவியலாளர்களாலும் ஊடக செய்திகளாலும் எச்சரிக்கப்பட்டது.
புற்றுநோயும் நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இதுவோ அதுவோ என காரணம் தெரியாமல் அது சம்பந்தப்பட்ட அல்லது அது விளைவிக்கக் கூடியதாகக் கருதப்படும் அனைத்து வகையான பொருட்களையும் மக்கள் தவிர்த்து விட்டனர்.
இதன் பின்விளைவாக டப்பர்வேர் நுகர்வு குறைந்தது.
அதுமட்டுமின்றி கொரோனா காலத்திலும் பெரும்பாலும் வொர்க் ப்ரம் ஹோமில் மக்கள் பணியாற்றும்போது அவர்களுக்கு லஞ்ச் டப்பாக்கள் தேவையற்றதாக மாறிப்போனது.
அதன் பின்பு பல்வேறு போட்டி நிறுவனங்கள் வந்துவிட்டதால் டப்பர் வேர் நிறுவனம் போதிய அளவு நிதியை திரட்ட முடியாமல் திணறுகிறது. இந்த நிலை பல ஆண்டுகளாக நீண்ட நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டப்பர்வேர் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்க மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து டப்பர்வேர் நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதத்துக்கு மேல் சரிந்து விட்டன.
நீங்களும் டப்பர்வேர் பயன்படுத்தி இருக்கிறீர்களா? கமெண்டில் சொல்லுங்கள்.