ஐஐடி வாய்ப்பை உதறி, இந்திய ராணுவ மேஜராகி ஐநா விருது பெறும் ராதிகா

IIT-யில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? லட்சங்களையும், கோடிகளையும் சம்பளமாக அள்ளக் கூடாதா? என ஏங்கிக் காத்திருப்போர் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், அவர்களில் தனக்கு மும்பை ஐஐடியில் பயோ டெக்னாலஜி படிக்க வாய்ப்பு கிடைத்து மிகவும் சிறப்பாகவே படித்துக் கொண்டிருக்கும்போது, படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் ராதிகா சென். இந்தியப் பெண்ணான இவருக்குத்தான் இன்னும் சில நாட்களில் ஐநா-வே விருது வழங்கி கவுரவப்படுத்தப்போகிறது. யார் இந்த ராதிகா சென்? இவர் அப்படி என்ன செய்தார்? என்பதை விளக்குகிறது ‘த காரிகை’

யார் இந்த ராதிகா சென்?

அழகிய மலைகள் கொண்ட இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்தவர். மிடில் கிளாஸ் பிரிவைச் சேர்ந்த இவர் கிராமத்தில் வசித்து வந்தவர். ராதிகாவுக்கு உயிரியல் அது சார்ந்த தொழில்நுட்பம் என்றால் படிப்பதில் மிகவும் ஆர்வம். இதற்காக அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பில் திறம்படப் படித்து நல்ல மதிப்பில் தேர்ச்சி பெற்று மாஸ்டர்ஸ் டிகிரி படிப்பதற்காக மும்பையில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார்.

படிப்பைப் பாதியில் விடக் காரணம் என்ன?

மிகவும் விரும்பித் தேர்ந்தெடுத்த படிப்பை ராதிகா கைவிடக் காரணம் அவர், நாட்டின் மீது வைத்த பற்றுதான். அவர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற விரும்பினார். பாதியிலேயே பிஜி டிகிரி படிப்பை கைவிட்ட ராதிகா கடும் பயிற்சி எடுத்து, இந்திய ராணுவத்தில் சேர்ந்து கொண்டார். அதில் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார்.

ஐ.நா.-வில் ராதிகா எப்படி?

ஐக்கிய நாடுகள் சபையானது பல்வேறு சமூக சேவைகளை வழங்கி வருகிறது. UNISEF எப்படி குழந்தைகளுக்கான அமைப்பாக இருக்கிறதோ, UNESCO எப்படி பாரம்பரியச் சின்னங்களின் பாதுகாவலனாக இருக்கிறதோ, அப்படி MONUSCO என்ற அமைப்பானது காங்கோவில் அமைதியை நிலைநாட்டப் பாடுபடுகிறது. அந்த அமைப்பில் அமைதிப் பாதுகாவலராக இந்தியா சார்பில் 2023-ல் காங்கோ சென்று அங்கு சேவையாற்றி வந்தவர் ராதிகா.

என்ன சேவை?

காங்கோ என்பது ஏழ்மை நாடு. வன்முறைகள் அதிகம் இருக்கும். அங்கு பெண்களுக்கான பாதுகாப்பு, பாலியல் தொல்லைகள் ஆகியவையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகம். அந்நாட்டில், பெண்களும், பெண் குழந்தைகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 2000 வியூகங்கள் அடங்கிய திட்டத்தை அங்கு உள்ள பெண்களுக்கு கற்றுத் தந்ததில் ராதிகாவின் பங்கு அளப்பரியது. அத்துடன் அவர் அங்கு உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து, பாட வகுப்புக்களையும் எடுத்து அவர்களை மிக அன்பாக கவனித்துக் கொண்டார்.

என்ன விருது?

ஐநா சபையின் அமைதிக்கான பரிசுகளில் பாலின மேம்பாட்டுக்காக பாடுபட்டவர்களுக்கான விருது 2023-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் பெண்மணியான ராதிகாவுக்கு கிடைக்கிறது. அமைதியை உருவாக்குவோருக்கான நாளில் இந்த விருது ராதிகாவுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இந்த விருது வாங்கியவர் யார்?

2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் சுமன் கவானி என்ற பெண் அதிகாரி, தெற்கு சூடானில் சேவையாற்றி இதே விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் எதையெல்லாமோ பகிரும் நாம், வீரத்திலும், அன்பிலும், பிறருக்கு பரிவு காட்டி அறிவு புகட்டும் சேவையிலும் ஜெயித்து வந்த மேஜர் ராதிகா சென்னுக்கு வாழ்த்து கூறி அவரது பெருமிதத்தையும் பகிர்வோம். புகழ் பாடப்படாத காரிகைகளை கவுரவிக்க என்றுமே ‘த காரிகை’ முன்னணியில் இருக்கும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE