மன அழுத்தம் தற்கொலையை தூண்டும்: தீபிகா படுகோன்
மன அழுத்தம் தற்கொலையை தூண்டும் : தீபிகா படுகோன்
பிரபல பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் தான் மன அழுத்தத்தில் இருந்த போது பல முறை தற்கொலை எண்ணம் எழுந்ததாகவும் அதில் இருந்து தான் எவ்வாறு மீண்டு வந்தேன் என்றும் பகிர்ந்துக் கொண்டார். கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா படுகோன் இந்த தகவல்களை அதில் பகிர்ந்துக்கொண்டார்.
பாலிவுட் பயணம் :
2007 ஆம் ஆண்டு “ஓம் சாந்தி ஓம்” திரைப்படம் முலம் பாலிவுட் உலகிற்கு அறிமுகமானவர் தீபிகா படுகோன். பெங்களுருவை பூர்விகமாகக் கொண்ட தீபிகா, தான் நடித்த முதல் படத்திலேயே பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு, பல்வேறு விருதுகளையும் தனதாக்கியவர். அடுத்தடுத்து தனக்கு வந்த படவாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட தீபிகா தொடர் வெற்றிகள் முலம் தற்போது வரை பாலிவுட் உலகில் உச்ச நட்சத்திரமாக நிகழ்கிறார்.
மும்பை நிகழ்ச்சி :
மும்பையில் சமீபத்தில் மன நலம் ஆரோக்கியம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா படுகோன் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார். அதில் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டதோடு, தனக்கு ஏற்பட்ட மன நல பாதிப்புகள் பற்றியும், அதில் இருந்து அவர் எவ்வாறு மீண்டு வந்தார் என்பதையும் பகிர்ந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தீபிகா பேசியது :
2014 ஆம் ஆண்டு சினிமா துறையில் நான் உச்சத்தில் இருந்து நேரம். எனக்கு எந்தவிதமான கஷ்டங்களும் அந்த நேரத்தில் இருந்ததில்லை, இருந்தாலும் ஒரு விதமான சொல்லமுடியாத சோகம் என்னை ஆட்கொண்டிருந்தது. பல நேரங்களில் காரணம் இல்லாமல் அழுவேன். மன அழுத்தங்களும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் என்னுள் பலமுறை தோன்றியது. இதுபோன்ற எண்ணங்கள் என்னுள் எழுபோதெல்லாம் அதில் இருந்து தப்பிக்க நான் தூங்கிவிடுவேன். அப்போது மும்பையில் இருக்கும் என்னைப் பார்க்க எனது பெற்றோர் பெங்களூருவில் இருந்து வருவார்கள். அவர்களுடன் இருக்கும் போது தைரியமாக இருப்பேன், அவர்கள் ஊருக்கு கிளம்பும் வேளையில் இணம் புரியாத சோகமும் , அழுகையும் வரும். அப்படி ஒரு நாள் என் அம்மா ஊருக்கு செல்லும் போது கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழுதேன். எனது அழுகை வித்தியாசமாக இருப்பதாக அம்மா கூறினார். நான் அப்படி அழுது பார்த்தது இல்லை என்று கூறிய அவர் நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். நான் அம்மா சொன்னதைத் தயங்காமல் செய்தேன். சில மாதங்களுக்குப் பின்னர் நான் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தேன். மன நலம் பொறுத்தவரை ஒருமுறை நீங்கள் குணமாகிவிட்டால் அதை மறந்துவிடக் கூடாது. ஆகையால் தான் நான் என் வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டேன். அதனால், என்னால் இப்போது இயல்பாக இருக்க முடிகிறது. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட காலகட்டம் மிகவும் மோசமானது. எனக்கு வெளியில் செல்ல பிடிக்கவில்லை. எந்த வேலையிலும் நாட்டமில்லை. யாரையும் சந்திக்கவும் விரும்பவில்லை. ஏன், வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று தோன்றியது. ஆனால் நான் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மீண்டு விட்டேன்
Live Love Laugh Foundation :
தீபிகா மன நல பாதிப்புகளில் இருந்து மீண்ட பிறகு தான், மன நல பாதிப்புகள் மீது உள்ள சமூக ஒடுக்குமுறைகளைத் தகர்க்கும் வகையில் 2015 ம் ஆண்டு லிவ் லவ் லாஃப் ( Live love laugh ) அமைப்பை உண்டாக்கினார். மன அழுத்தத்தால் மற்றவர்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கி, அதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் தீபிகா படுகோன். இந்த அமைப்பின் முலம், தன் வாழ்வில் ஒரே ஒருவரையாவது மன அழுத்தத்தில் இருந்து மீட்க முடியும் என்றால் அது மிகப் பெரிய பாக்கியம் என்றும் அவர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.