தியேட்டர் முழுக்க சிலுக்கு வைப். . . ஆனா, எல்லா சிலுக்கும் சிலுக்கல்ல. . .
“பாவா. . . . பாவா. . . !” என்ற கொஞ்சும் மொழியால் சுண்டி இழுத்த அழகிய சிலை சில்க். சில்க் என்பது பெயர், ஆனால் ‘சிலுக்கு’ என்பது ஒரு எமோசன்.
80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்கள் இதை மறந்து இருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது 2K கிட்ஸ்களுக்கு கூட சிலுக்கு தரிசனம் மார்க் ஆண்டனி என்ற டைம் டிராவல் படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
கொடும் புருவம் கோடாமறைப்பின் -நடுங்கஞர்
செய்யல மன் இவள்கண்! -ஐயன் வள்ளுவர்
அதாவது இவள் கண்ணுக்கு திரை போட்டு என்னை காக்கும் புருவங்களே வாழ்க! என்று கூறுவது போல் கண்ணழகிலேயே மயக்கியவர் சில்க் ஸ்மிதா.
சிவாஜி ரஜினி கமல் என உச்ச நட்சத்திரங்களையே தனது கால் சீட்டுக்காக காக்க வைத்தவர்
ஒரே பாட்டில் நடிகைகளை விட அதிக அளவு சம்பளம் பெரும் அளவு திரைத்துறையில் உயர்ந்தவர்.
நடிகைகள் ரேவதி, அமலா, நதியா, ஷாலினி உள்ளிட்ட நடிகைகள் கூட சில்க் ஸ்மிதாவின் ஸ்டைல், உடை, அழகு, நடன அசைவு, நடிப்பு திறன் பற்றி வியந்து பேசி இருக்கின்றனர்.
உச்சத்தில் இருந்தாலும் அவரால் தனது தனிமையை வெல்ல முடியவில்லை.
கோடம்பாக்கத்தில் மாவு மில்லுக்கு வந்த போது விணுச்சக்கரவர்த்தியின் கண்ணில் பட்ட விஜயலட்சுமி சில்க்ஸ்மிதாவாக உருவெடுத்து, திரையில் பல ஆண்டுகள் ஜொலித்த போதும் தனது 35 வயதிலேயே தூக்கு போட்டு மரணிக்கும் அளவு தனது வாழ்வில் பல கணத்த சோகங்களை சுமந்திருந்தார். இவரை மையப்படுத்தியே டர்ட்டி பிக்சர் எடுக்கப்பட்டது. ஆனால் அதில் பல புனைவுகளும் இருந்தது.
சிலுக்கு இறந்து 27 வருடங்கள் ஆகியும் அவரைப் போன்ற ஒத்த உருவுடைய இன்ஸ்டாகிராம் மாடல் விஷ்ணுப்பிரியா காந்தி என்ற ஒரு பெண் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வந்தார். இணையத்தை மட்டும் அல்லாது மார்க் ஆண்டனி என்ற பெயரில் வெளிவந்து பாசிடிவ் விமர்சனங்களை அள்ளி வரும் படத்திலும் இடம்பெற்றுள்ளார். விஷால், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் அந்த பெண் சில்கைப் போல நடிக்க வைக்கப்பட்டுள்ளார். டைம் ட்ராவல்-ஐ மையப்படுத்திய அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவைப் போன்றே இருக்கும் அந்த பெண்ணும் சில்க்கை திரையில் காட்டினால் எப்படி ஒரு வைப் ஏற்படுமோ அந்த வைபை மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளார்.
மார்க் ஆண்டனி படத்தின் மொத்த படத்திலும் அதிக காமெடிகள் இடம் பெற்றிருந்தாலும், சில்க் ஸ்மிதாவைப் போன்று வரும் பெண்ணைக் கண்டு ரசிகர்கள் கொடுத்த ஆரவாரம் திரையரங்கையே அதிரச் செய்தது.
இறந்த 27 வருடங்களுக்கு பின்பு மறு ஜென்மத்தில் சில்க் ஸ்மிதா வந்து தரிசனம் கொடுப்பது போல் தியேட்டரில் உற்சாகம் பெருக்கெடுத்தது.
ஆனால், குலைந்து குலைந்து பேசும் மொழியும், விழியாலே கட்டியிழுக்கும் காந்த பார்வையும் சில்க்ஸ்மிதாவுக்கே ரசிகர்கள் எழுதி வைத்த சொத்து. என்ன இருந்தாலும் “எல்லா சிலுக்கும் சிலுக்கல்ல” என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.