இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து தனிக்கட்சி தொடங்கிய நடிகர்களின் தற்போதைய நிலை

கேரளா, மேற்குவங்கம் போன்றல்லாமல் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தில் வழக்கமாக நடப்பதுதான். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமலுக்கு முன்னதாக விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், டி ராஜேந்திரன் உள்பட பல நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்தவர்கள். தனிக்கட்சி தொடங்கியவர்களின் வரிசையில் தற்போது நடிகர் விஜயும் இணைந்துள்ளார்.

கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர்., விஜயகாந்தை தவிர பிற நடிகர்கள் பெருமளவு வெற்றியைப் பெறவில்லை. ஏன், கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த ரஜினிகாந்த் கூட உடல்நலக் குறைவு காரணமாக பின்வாங்கினார். கட்சி ஆரம்பித்து களமிறங்கிப் போட்டியிட்ட கமல்ஹாசனோ தனது தொகுதியில் வெற்றி வரை சென்று தோல்வியுற்றார்.

ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் பேசும் போது, மக்கள், நலத்திட்டம், அரசியல் பற்றி வெறியேற்றத் தவறிவிட்டு, திடீரென அரசியல் பிரவேசம் செய்யும்போது, தனது எண்ண அலைகளுக்கு ஏற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகிறது.

இதற்குக் காரணம் ஒரு நடிகரால் அரசியல் செய்ய முடியாது என்பதல்ல, அவரையும், அவரது நடிப்பையும் நேசித்து மன்றத்தில் சேரும் ரசிகருக்கு அரசியலோ, பொது சேவையோ ஆர்வமின்றி இருப்பதுவும் தோல்விக்கு காரணமாகிவிட வாய்ப்புள்ளது.

விஜயகாந்த்

விஜயகாந்தை பொறுத்தவரை, ரசிகர் மன்றங்களை கட்சியின் உறுப்பினர் மன்றங்களாக மாற்றினார். 2005இல் கட்சி தொடங்கிய அவர், ஜனரஞ்சகமான கொள்கைகளை பேசினார். படங்களில் உள்ள வசனங்களும் அவ்வாறே இருந்தன. கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி மறு ஆண்டே தேர்தலை சந்தித்து, 10 சதவீத வாக்குகளை பெற்று, எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபித்தார். 3-வது அணியாக உருவெடுக்க அவர் திமுக அதிமுக போல் அனைத்து கிராமங்களில் ரசிகர்களைக் கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டார். அவரின் ஒருங்கிணைக்கும் திறனும் தலைமைப் பண்பும் இதை சாத்தியமாக்கியது.

ஆனால், அவர் நம்பி சீட்டு கொடுத்த வேட்பாளர்கள் பல்டியடிக்க அரசியலில் நிற்க முடியாமல் ஆட்டம் கண்டு போனார்.

சரத்குமார்

விஜயகாந்தை போல தனது ரசிகர் மன்றங்களை ஊக்குவிக்க முடியவில்லை என்பதால்தான் சரத்குமாராலும் கட்சியில் வெல்ல முடியவில்லை. 2007இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கினார். திமுக அல்லது அதிமுகவை நம்பியே தேர்தலை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பாக்யராஜ்

பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதோடு சரி. தீவிரமாக செயல்படாததால் மக்கள் அவரை அரசியல்வாதியாக ஏற்கவில்லை. எனவே, ஒரு கட்டத்தில் அவரது கட்சியை திமுகவோடு இணைத்துவிட்டார்.

டி.ராஜேந்தர்

திமுக எம்எல்ஏவாக இருந்து 2005இல் அக்கட்சியில் இருந்து பிரிந்து வந்தார். அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என கட்சி தொடங்கி பணியாற்றியும் வெற்றி கிடைக்கவில்லை.

கார்த்திக்

நடிகர் கார்த்திக் 2006இல் அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்றார். சாதி அரசியலில் இறங்கியதால் அரசியல் கட்சியை சரிவர இயக்கவில்லை.

சிவாஜி

1989ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் சிவாஜி, எம்ஜிஆர் மறைவால் அதிமுகவில் பிளவு உருவான போது, ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார். ஜெயலலிதா அணியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றே இந்த முடிவை எடுப்பதற்காக ஏற்கெனவே இருந்த காங்கிரசில் இருந்து விலகினார். ஆனால், ஜெயலலிதா வெற்றி பெற்றதாலும், திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோற்றதாலும், தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய ஆண்டே களைத்துவிட்டார்.

சீமான்

நடிகர் சீமான் நாம் தமிழர் என்ற கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முன்புபோல் அல்லாமல் தனது தெறிக்கும் பேச்சாற்றலால் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வங்கியில் மக்கள் நம்பிக்கையை சேகரித்து வருகிறார்.

கருணாஸ்

நடிகர் கருணாஸ்கூட முக்குலத்தோர் புலிப்படை தொடங்கி பின் அதிமுகவில்லை இணைந்தவர்தான்.

இவர்கள் தவிர உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ளவர்தான். ஆனால், அவர் புதியதாக தனிக்கட்சி தொடங்கவில்லை. ஏற்கெனவே தனது தந்தை, தாத்தா உள்ளிட்டோர் நிர்வகித்த திமுகவில் தான் உள்ளார்.

ராதாரவி, கௌதமி, குஷ்பூ, உள்ளிட்டவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சியில் உள்ளனரே தவிர தனியாக கட்சி தொடங்கவில்லை. மற்றபடி நட்சத்திரப் பேச்சாளர்கள் என அனைத்துக் கட்சியும் நடிகர் பட்டாளத்தை ஏராளமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த நடிகரும் அரசியலுக்கு வரலாம் என்ற சூழல் தமிழகத்தில் இருக்கிறது. ஆனால், மக்களே சில சமயம் ஓட்டுக்கு பணம் என வாக்கை விலைக்கு விற்கும்போது, பணம், செல்வாக்கு, ஆள்பலம் உள்ளிட்டவை இன்றி முட்டி மோதி ஜெயித்து மேலே வர அதீத கடும் உழைப்பும், தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் மக்களிடம் பெறும் நம்பிக்கையையும், ஜெயித்தபின் பல்டி அடிக்காமல் அதே கட்சியில் நீடித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் பொறுத்தே அமையும். நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE