அதிகரிக்கும் இந்திய குடும்பங்கள் கடன்!
பல்வேறு காரணங்களால் இந்திய குடும்பங்களின் கடன் சுமை உயர்ந்து கொண்டே போகிறது. அதே சமயம் அவர்களுடைய சேமிப்பும் வெகுவாக குறைந்து வருவதாக மோதலால் ஓஸ்வால் என்ற ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா என்ற பெருந்தொற்று காலத்துக்கு பின்பு மக்கள் தங்கள் வழக்கமான வாழ்வை இழந்துவிட்டனர். இது ஒட்டுமொத்தமாக உலகில் உள்ள அனைத்து குடும்பங்களையும் தான் பாதித்தது. ஏராளமான உயிரிழப்புகள் அதைத் தொடர்ந்து பெரும்பாலான குடும்பங்கள் சம்பாதித்து கொண்டிருந்த குடும்பத் தலைவர்களை இழந்தது, இதனால் முன் அனுபவம் தொழில் முறை பயிற்சி என எதுவும் இல்லாத பெண்கள் அல்லது குழந்தைகள் தங்களை தாங்களே சம்பாதித்து காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன், காரணமாக உலக அளவில் மட்டுமின்றி இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகளும் அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதாவது ஒரு நாடு எவ்வளவு பொருளாதாரத்தை ஈட்டுகிறதோ அதற்கும் பாதிக்கும் குறைவாக கடன் பெறுவதற்கு சமமாகும். ஏனெனில் ஒட்டுமொத்த குடும்பங்கள் தான் இந்தியாவின் அடிப்படையான கட்டமைப்பு. எனவே இந்த கடன் சுமையானது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியிலும் வரும் காலத்தில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து மோதிலால் ஒஸ்வல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நிதி ஆண்டின் முதல் 9 மாதங்கள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 2023 மார்ச் முதல் டிசம்பர் 2023 வரை இந்திய குடும்பங்களில் ஒட்டுமொத்த நிதி சேமிப்பு ஆனது, 10.5 லிருந்து 10.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே காலத்தில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2022 – 2023 ஆம் ஆண்டில் மொத்த கடன் வாங்கும் அளவீடு உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக அதிகரித்தது.
இது இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு உயரக்கூடிய அதிகப்படியான 2வது முறையான உயர்வு ஆகும்.
2022-2023 இந்திய குடும்பங்களின் கைவசம் சேமிப்பு ஜிடிபி-யில் 18.4 சதவீதமாக கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவை எட்டி உள்ளது.
இந்த தரவுகள் அனைத்தும் வங்கிகளில் இருந்து இந்திய குடும்பங்கள் பெற்ற கடன்களின் தகவல்களை வைத்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவாக, இந்திய குடும்பங்களின் வருமானம் தொடர்ந்து பலவீனமாக உள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது. சேமிப்பின் மீது அதிக பற்று கொண்ட இந்திய குடும்பங்களிடம் தற்போது சேமிப்பு குறைந்தது வியப்புக்குரியதாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
கடும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலை வாய்ப்பு இன்மை, எரிபொருள், தங்கம் விலை உயர்வு, அத்தியாவசிய செலவுகள் அதிகரிப்பு, பாரம்பரிய பழக்கமான சேமிப்புத் திறன் குறைவு, எளிதில் கடன் வாங்கும் தன்மை உள்ளிட்டவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.