முரட்டு மீசையும், மழலை சிரிப்பும் . . .

சென்னை வெள்ளத்தில் என்னதான் மக்கள் தவியாய் தவித்து வந்தாலும், வெள்ளத்தைப் பற்றிய புகைப்படங்கள் மனதை உலுக்கும் வகையில் இருந்தாலும், ஒரே ஒரு புகைப்படம் மட்டும் மனதை உருக்கும் வகையில் அமைந்தது.

வெள்ளத்தில் பூத்த மனிதாபிமானங்களின் காட்சிகள் பலவும் சமூகவலைதளங்களில் உலவின. அவற்றில் பெரும்பாலும் பப்ளிசிட்டி சாயமே தென்பட்டது. லைக்குகளுக்காகவும், ஃபோலோயர்களுக்காகவும் ஓடி ஓடி உதவுவது போல் பலரும் கேமராக்களின் கண்களின் முன் படம் ஓட்டிக் கொண்டிருந்தாலும், யாருடைய கண்ணும் குறிப்பாக கேமரா கண்களை எதிர்பார்க்காது இரவும் பகலும் வெள்ள நீரில் சேவை செய்தவர்கள் தான் காவல்துறையினர்.

பொதுவாக முரட்டு மீசையும், மிடுக்கு உடையும் போட்டிருக்கும் காவலர்கள் பொதுவாக விரைப்பாகத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் சிரிப்பதே அரிது. அப்படியிருக்க, பணிக்கு இடையில் காவல்துறையினர் ஒருவர் சிரித்த விதமும், அவரை சிரிக்க வைத்த நபரும் தற்போது பிரபலமாகியுள்ளனர்.

அதன்படி, சென்னை துரைப்பாக்கம் விபிஜி அவென்யூவில் வெள்ள நீரில் 2 நாட்களாகத் தத்தளித்தவர்களை போலீசார் மீட்க உதவினர். அப்போது, தலைமைக் காவலர் தயாளன் வெள்ள நீரில் குழந்தையைத் தூக்கி வரும் தாய் வெள்ள நீரில் குழந்தையோடு தவறி விழுந்துவிட்டால் என்ன செய்வது? என்ற அக்கறையோடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தார். அப்போது முரட்டு மீசை நெளிய குழந்தையை அரவணைத்துப் பிடித்தபடி சிரித்தார்.

இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வந்தனர். தலைமைக் காவலர் தயாளனுக்குப் பாராட்டுக்களும் குவிந்து வந்தன. இதுபற்றிக் கூறிய தயாளன், “துரைப்பாக்கம் விபிஜி அவென்யூவில் 500-க்கும் மேற்பட்டோரை மீட்டோம். அப்போது கைக் குழந்தையுடன் வந்த ஒரு குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து வந்தேன். போலீஸ் சீருடையில் இருந்ததால் உங்களை பார்த்து குழந்தை பயப்படப் போகிறது என குழந்தையின் அம்மா கூறினார்.”

”அவர்கள் பாதுகாப்பாக வர வேண்டும் என்பதற்காக குழந்தையை நான் வாங்கிக் கொண்டு தண்ணீரில் நடந்து வந்தேன். அப்போது, குழந்தை என்னைப் பார்த்து சிரித்ததால், நானும் குழந்தையைப் பார்த்து சிரித்தேன். குழந்தையின் சிரிப்பை பார்த்தவுடன் 4 நாட்களாக மழை வெள்ளத்திற்கு மத்தியில் தொடர்ந்து பணியாற்றிய களைப்பு பறந்து போய்விட்டது, யதார்த்தமாக நடந்த இந்த நிகழ்வின் போது எடுத்த படம் இந்த அளவுக்குப் பரவும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என பெருமிதத்தோடு கூறினார்.

தோளில் ஒரு பையோடு இருந்தாலும் குழந்தையை பத்திரமாக அரவணைத்து, ரவுடிகளை வெளுத்து எடுத்த முரட்டுக் கையில், குழந்தையின் பிஞ்சுப் பாதங்களைக் கையில் ஏந்திப் பிடித்து சிரித்தது வெகுவாகக் கவர்ந்தது.

சென்னை மாநகர ஆணையரும், டிஜிபி அலுவலகத்தில் இருந்தும் உயர் அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்து பாராட்டினராம். போலீஸ் அதிகாரிகள் தன்னைப் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் தயாளன் கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE