அந்தக் காலத்தில் கையை உயர்த்தி, தலையைச் சுற்றி மறுபுற காதின் நுனியைத் தொட்டால்தான் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்வர். ஆனால் அந்த நிலை மாறி தற்போது பிளே ஸ்கூல், பிரீ கேஜி, எல்.கே.ஜி., யூ.கே.ஜி., முதல் வகுப்பு என ஒன்றரை வயது முதலே குழந்தைகளை பள்ளியில் விடும் சூழல் மாறி வருகிறது.

பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்லும் நிலையில், குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் யாரும் இல்லாத நிலையிலும் மிகச் சிறுவயதிலேயே பள்ளிக்கு அவர்களை அனுப்பும் நடைமுறை தொடங்கியது. பின் வீட்டில் இருக்கும் பெண்களே தங்களால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே வெகு சீக்கிரத்திலேயே பள்ளியில் சேர்த்தனர்.

முதலாம் வகுப்பில் குழந்தையை சேர்த்தால் போதும் என நினைத்த பெற்றோர்கள் கூட உண்டு. ஆனால், பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளை வெகு சீக்கிரத்திலேயே சேர்த்துவிட்டதால், முதல் வகுப்பில் பள்ளி அனுபவமோ, பாட அறிவோ இல்லாத தங்கள் குழந்தை மட்டும் ஒன்றும் புரியாமல் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி தாங்களும் சீக்கிரத்திலயே பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், பிஞ்சு குழந்தைகளை ஹோம் வொர்க், எக்ஸாம் என படுத்தி எடுப்பதைக் கண்டு அதிர்ந்த மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் ஒரு கடிவாளம் போட்டுள்ளது. அதன்படி 6 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே முதலாம் வகுப்பில் சேர்க்க முடியும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மாநில அரசுகளுக்கும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது மத்திய அரசு.

தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்றி அரசுப் பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி முதலாம் வகுப்புக்கு முன் எத்தகைய வழியில் கல்வி பயின்றாலும் சரி. 6 வயது நிரம்பாமல் அட்மிசன் கிடையாது என பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுக்க வாய்ப்புள்ளது. அல்லது மறு பரிசீலனை கோரவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஐந்து அல்லது ஐந்தரை வயதில் 1-ம் வகுப்பை எட்டும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு தளர்வு உள்ளதா? என்பதையெல்லாம் மத்திய அரசின் கல்வித்துறை அதிகாரிகள் தெளிவாக விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது மாதிரியான அறிவிப்புக்கள் குழந்தைகளின் மனநலத்தைப் பேண உதவும் என மன நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 3 முதல் 8 வயது என்பது அடிப்படைக் கல்விக்கு அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் மிகச் சிறு வயதிலேயே படி, எழுது, பிராஜக்ட் செய், பாடு, ஆடு, ஓடு என அவர்களை அதட்டுவது, பள்ளி மீதும், கல்வி மீதும் ஒரு சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி பிற்காலத்தில் படிப்பென்றாலே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் உள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் மன நல ஆலோசகர்கள்.

https://thekarigai.com/parenting-tips-that-helps-your-kids-stay-focussed-on-their-studies/

You may have missed

Facebook
Instagram
YOUTUBE