சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகபட்சம் அமரக்கூடியவர்களின் எண்ணிக்கையை விட்டு அதிகமாக பல லட்சம் டிக்கெட்டுக்கள் அதிகம் விற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பின்விளைவாக சென்னையில் முதல்வரின் வாகனம் உள்ளிட்ட ஏராளமான வாகங்கள் 5 முதல் 6 மணி நேரங்கள் வரை டிராஃபிக்கில் சிக்கியது.

என்னென்ன குறைகள்?

அதிக டிக்கெட் விற்பனையால் குபுகுபுவென வந்த கூட்டம்

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை

கூட்ட நெரிசலால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்

மூச்சுவிட முடியாதபடி சுவாசத்துக்காக திணறிய முதியவர்கள், குழந்தைகள்

வாகனங்களுக்கு சரியான பார்க்கிங் வசதி செய்யாதது

பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு பல வாயில்கள் இல்லாதது

பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டது

லட்சக்கணக்கானோரின் பணம், நேரம் விரையமானது

கான்செர்ட்டுக்கு வராதவர்களும் மணிக்கணக்கில் டிராஃபிக்கில் சிக்கியது

குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள் போதிய அளவு இல்லாதது

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பிவந்த ரசிகர்களின் வெறுப்பு

இச்சம்பவத்தில் ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக சக இசையமைப்பாளரும் அவ்வப்போது கான்செர்ட் நடத்துபவருமான யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய பொருட்களை வரவழைப்பது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை சமாளிப்பது என அனைத்தையும் சரிவர செய்து, அதை நடத்திக் காட்டுவது சவாலான பணி. இது போன்ற இசை நிகழ்ச்சிகளில் கட்டுக்கடங்காத கூட்டம், எதிர்பாராத சில பிரச்சனைகள் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவது துரதிஷ்டம்.

நல்ல நோக்கங்கள் கூட நமது இசையை ஆராதிக்கும் நமது ரசிகர்களிடம் தவறாக போக வாய்ப்பு இருக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் ஏற்பாட்டாளர்களும் இந்த நிகழ்வில் தங்களை பிரதிபலிப்பது தான் இங்கே முக்கியமானது. நாங்கள் மேடையில் இருக்கும் சமயத்தில் அனைத்துமே மென்மையாக நடக்கும் என்றும் எங்கள் ரசிகர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவார்கள் என்றும் இது போன்ற தயாரிப்பாளர்கள் மீதுதான் முழு நம்பிக்கையும் வைத்திருக்கிறோம்.

இதைப் பார்க்கையில் உண்மையிலேயே மனம் உடைகிறது. மேலும் நான் உட்பட இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சிக்கான திட்டமிடுதலிலும் பாதுகாப்பு காரணிகளிலும் முக்கிய பங்கு எடுத்து கவனிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. ஒரு இசையமைப்பாளராக துரதிஷ்டவசமாக இந்த நிகழ்வுகள் நடந்ததாக கருதி இந்த சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிவதுடன் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இரவை இந்த இசை நிகழ்ச்சி மூலம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை நடத்திய ரஹ்மானுக்கு இது ஏமாற்றமாகும் என கூறியுள்ளார்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் பாதுகாப்பில் கவனம் எடுத்து செயல்படுத்துவார்கள் என நம்புகிறோம்.”

இசையமைப்பாளராக ஏஆர் ரகுமானுக்கு இப்படி யுவன் சங்கர் ராஜா குரல் கொடுத்துள்ளதை பலர் வரவேற்றாலும், இப்பிரச்னையால் தனது கான்செர்ட்க்கு எதிர்காலத்தில் தடை ஏதும் வந்திடக் கூடாது என குரல் கொடுப்பதாக அதையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

ரகுமானுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தியும் குரல் கொடுத்திருக்கிறார்.

“ரகுமானை 30 ஆண்டுகளாக தெரியும். ஏராளமான மக்களுக்கு அவர் விருப்பமான இசையமைப்பாளராக இருக்கிறார். இந்த சம்பவத்தால் அவரும் தான் மிகவும் சோகமாக இருக்கிறார். என்னுடைய குடும்பமும் அந்த இசை நிகழ்ச்சியில் இருந்தது. அவர்களும் பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தான் பிரச்சனை என தோன்றுகிறது. அவர்கள்தான் முழு பொறுப்பு இதற்கு ஏற்க வேண்டும். எப்போதுமே தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது ரகுமான் ஒரு பாசத்தை வைத்திருப்பார். இந்த சம்பவத்துக்கு ரகுமானை பொறுப்பாக்க வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல் நடிகை குஷ்புவும்கூட #standwitharr என்ற ஹேஸ்டேகில் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

“இது மிகவும் துரதிஷ்டவசமானது. ஏராளமான மக்கள் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். எனது மகள்களும் அவளது தோழிகளும் கூட இந்த இசை நிகழ்ச்சியில் இருந்தனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கையில் டைமண்ட் பாஸ் இருந்தது. 3 மணி நேரம் காத்திருந்து டிக்கெட் காண்பித்து அவர்கள் உள்ளே சென்றனர். இந்த பிரச்சனைக்கு ரஹ்மானை பொறுப்பாக்க முடியாது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முற்றிலும் தோல்வியடைந்து விட்டனர். இதற்காக ரஹ்மான் மீது பழியை போடாதீர்கள். எப்போதுமே அவர் தனது ரசிகர்களை ஏமாற்றியதில்லை. நாம் அவருடன் துணை நிற்போம்”

எனக் கூறியுள்ளார்.

மகள் கதீஜா என்ன சொல்கிறார்?

தன் அப்பாவை மோசடியாளர் என்று குறிப்பிடுவது பற்றி ரஹ்மான் மகள் கதீஜாவும் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார் . அதில் “சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கின்றனர். துரதிருஷ்டவான சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தரப்பே 100 % பொறுப்பு. இருந்தபோதிலும் தனது தந்தை இந்த விவகாரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

அதுமட்டும் இன்றி, “என்தந்தை மோசடி செய்வது போன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன் கேரள மழை வெள்ளம், கோவிட் பாதிப்பு ஆகியவற்றுக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறார். அதேபோல், லைட்மேன்களுக்காகவும் இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். அதன் மூலம் நிதி திரட்டி வழங்கியிருக்கிறார். எனவே, அவரைப் பற்றி பேசும் முன் இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்“ என கோபத்தோடே தனது தந்தை தரப்பை குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், ஏ.ஆர்.ரஹ்மான் யாரையும் இந்த சம்பவத்தில் விரல் நீட்டி சுட்டிக்காட்டவில்லை என்பதும், செய்ததை சொல்லிக்காட்டுவதை அவரே விரும்பமாட்டார் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

எத்தனையோ வெளிநாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தியும், சென்னையில் நிகழ்ச்சி நடத்த அனுமதியே கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதாக ரகுமான் ஓப்பனாக சொன்னதால்தான், வேண்டுமென்றே அவர் நிகழ்ச்சியை சொதப்பியிருக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. முதல்வர் கூட போக்குவரத்து சரியில்லை என காவல்துறையினரைக் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE