மழை வருதா? சூடா முந்திரி பக்கோடா செய்யுங்க!
மழை வரும் மாலை நேரங்களில் சூடாக ஏதாவது சுவைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் யார் செய்வது? எவ்வளவு நேரம் அதற்காக ஒதுக்க வேண்டும்? என்று நினைத்து அந்த எண்ணத்தை சோம்பேறித்தனமாக கைவிட்டவர்களும் உண்டு. என்னதான் சம்பாதித்தாலும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, அதையும் வீட்டில் செய்து சாப்பிடுவது என்பது ஆடம்பர செலவாக கருதப்படாது.
அதிலும் சுட சுட முந்திரி பக்கோடா சாப்பிட்டால், ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்.
முந்திரி பக்கோடாக்கள் பெரும்பாலும் கடைகளில்தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனால் அது செய்வதற்கு அவ்வளவு எளிது என்பதை இந்த ரெசிபியை பார்த்ததும் உங்களுக்கு தோன்றலாம். ரெசிபி எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ, அதேபோல்தான் சமையலும் மிக எளிமையாகவே இருக்கும். சமைத்து அனைவரையும் அசத்தி விடலாம். அதற்கு தற்போது தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
முக்கிய குறிப்பு உங்கள் வீட்டில் முந்திரி இல்லாவிட்டால் அதற்கு பதில் வறுத்த வேர்க்கடலைகளை போட்டு கூட நீங்கள் பக்கோடா செய்யலாம்.
தேவையான பொருட்கள் என்னென்ன?
முந்திரிப் பருப்பு வறுத்ததாக இருந்தால் ஒன்றரை கப் எடுத்துக் கொள்ளுங்கள்
முந்திரிப் பருப்பு இல்லாவிட்டால் வறுத்த நிலக்கடலை பயன்படுத்தலாம்.
கடலை மாவு அரை கப்
அரிசி மாவு 4 நாலு ஸ்பூன்
பூண்டு 5 பல்லு
வரமிளகாய் 5
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு
தண்ணீர் ஒரு கப்
நன்கு பொறித்து எடுக்க எண்ணெய் தேவையான அளவு.
எப்படி செய்யுறது?
இந்த முந்திரிக்கு பக்கோடா செய்ய கடைகளில் இருந்து வறுத்த முந்திரியை வாங்கிக் கொள்ளலாம். அல்லது முந்திரியை நீங்களே வாங்கி வீட்டிலேயே வறுத்துக் கொள்ளலாம்.
பூண்டையும் வரமிளகாயையும் 15 நிமிடம் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் அதனை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையில் கடலை மாவு அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
ஏற்கனவே பூண்டும் வரமிளகாயும் ஊற வைத்த தண்ணீரையே தேவைப்பட்டால் தெளித்துக் கொள்ளலாம்.
ஓரளவு கெட்டியாக உள்ள இந்த கலவையில் முந்திரி பருப்பையோ அல்லது கடலையையோ அல்லது இரண்டும் இருந்தால் இரண்டுமே சேர்த்து போட்டுக் கொள்ளலாம்.
இவற்றை நன்றாக கலந்து முந்திரியின் அனைத்து பகுதிகளிலும் படும் வகையில் கிளறி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து டீப் ஃப்ரைக்குத் தேவையான எண்ணெயை ஊற்றி சூடு படுத்திக் கொள்ளவும்.
உங்கள் கையில் என்ணெயைத் தடவிக் கொண்டு ஒவ்வொரு முந்திரியாக பிரித்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொன்னிறமாகும் வரை பொறித்து எடுத்து கொள்ளவும்.
எண்ணெய் அதிகமாக இருந்தால் பேப்பர் டவல் கொண்டு மீதமுள்ள எண்ணெயை உறிஞ்சி எடுக்கவும்.
இதனை அதிக அளவில் செய்து காற்று போகாத கண்டெய்னரில் அடைத்து வைத்து ஒரு மாதம் வரை கூட பயன்படுத்தலாம்.
வெளிநாடு செல்லும் பிள்ளைகளுக்குக் கூட சமைத்து கொடுத்து அனுப்பலாம்.
மழை வரும் மாலை நேரங்களில் சேர்த்து சாப்பிட அருமையான ஸ்னாக்ஸ் தயார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.