97% மரணம் நிச்சயம்! மூளையை தின்னும் அமீபா. தடுப்பது எப்படி?
கேரளாவில் கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் மூளையை தின்னும் அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97%க்கும் அதிகமானோர் இறந்துபோவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (சிடிசி) கூறுகிறது.
மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஆகும்.
அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய 1 முதல் 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர். பொதுவாகத் தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது என CDC கூறுகிறது.
உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.
இந்த தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இறந்தபிறகே, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படும் சூழல் உள்ளது.
அமீபா உள்ள தண்ணீரைக் குடிப்பதால் தொற்று ஏற்படாது. வேறு ஒருவரிடம் இருந்தும் இந்தத் தொற்று பரவாது எனவும் சிடிசி தெரிவித்துள்ளது.
எப்படி நோய் வரும்?
குளம், குட்டைகள் நீர் நிலைகளில் இருக்கக்கூடிய குளங்களிலும் இருக்கலாம்.
தமிழ்நாட்டில் இது சம்பந்தமாக எதுவும் பதிவாகவில்லை.
வெப்பமண்டல நீர்நிலைகள் இருக்கும் இடத்தில் இந்த அமீபா வளரக்கூடும்.
குளம், கேளிக்கை பூங்கா, ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளம் நீர்நிலைகளில் குளிக்கவோ நீந்தவோ போகும்போது வெளியே வந்த பின் 5 முதல் 9 நாட்களில் தீவிர அறிகுறிகள் தோன்றலாம் .
என்னென்ன அறிகுறிகள்?
தலைவலி
வாந்தி
காய்ச்சல்
முதல் 5 நாட்கள் இந்த அறிகுறிகள் இருக்கும். அதன் பின் நோய் முற்றிவிட்டால் குழப்பம், தொடர் தூக்கம், கழுத்து இறுக்கம் ஆகியவை இருக்கலாம்.
இவை நோய் முற்றிவிட்டதற்கான அறிகுறிகள் ஆகும்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் தொடர்ந்து குழந்தை தூங்கிக் கொண்டிருந்தால் இந்த நோய் முற்றிவிட்டது என்று அர்த்தம்.
இந்த நிலைக்கு வரும் முன்பாகவே குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவது நல்லது.
சிகிச்சையை விட நோய் தடுப்பு மிகவும் முக்கியமான விஷயம்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
நோய் தடுப்பதற்கு குளம் குட்டைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் இதனை சுத்தமாக வைத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
மண், சேறு ஆகியவற்றை கிளப்பி விட்டு விட்டு அந்த நீரில் குளிக்க கூடாது. அவை அமீபாக்கள் புகலிடம் ஆக இருக்கலாம்.
2 PPM என்ற அளவுக்கு நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் கலந்திருக்க பட வேண்டும்
அப்படி போதிய அளவு குளோரின் கலந்திருக்கும் நீரில் அமீபாக்கள் இருந்தாலும் அது இறந்து விடும்.
எங்கெல்லாம் குளம், குட்டைகள் வெப்ப மண்டல பகுதியாக சூடாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த அமீபாக்கள் வாழக்கூடும். கேரளாவில் மட்டும் அல்ல.
குளம் குட்டைகளில் குளிக்கும் போது ஸ்விம்மிங் நோஸ் க்ளிப்புகள் , நோஸ் மாஸ்க் போட வேண்டும்.
அப்பொழுதுதான் டைவடிக்கும் போது அந்த வேகத்தில் மூக்கின் வழியாக அமீபா புகுந்து நரம்பு மண்டலம் வழியாக மூளைக்கு சென்று தாக்காமல் இருக்கும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி, குழப்பம், தன்னை மறந்த தூக்கம் ஆகியவை இருந்தால் அனைத்து வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனையை உடனே அணுகுவது கட்டாயம்.