BB Day 13 – வெளுக்கும் பிக்பாஸ் சாயம்
முந்தைய எபிசோட்களில் பிக் பாஸ் சீசனில் பார்த்தால் ஒவ்வொருவரும் தாங்களாகவே சண்டைப் போட்டு, அழுது, எமோஷனல் ஆகி, நகைச்சுவை செய்து இயற்கையாக தங்களது கண்டன்டுகளை கொடுத்து வந்ததாக தான் மக்களை நம்ப வைத்தார்கள்.
ஆனால் இப்போது வன்மமும் குரோதமும் மனதில் கொண்டு அடுத்த வீட்டு ஆட்களை பட்டினி போடும் மனப்பாங்குக்கு, வார இறுதியில் வாத்தியார் கம்மல் வந்ததும் வேட்டு உண்டு என நினைத்து காத்திருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி விரிவாக பார்க்கும் முன் வீட்டில் 13-ம் நாளில் என்ன நடந்தது என்பதன் சுருக்கத்தை பார்த்து விட்டு வரலாம்.
பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் குரூப்பிசம் பற்றி சுரேஷிடம் விசாரித்து கொண்டிருந்தார் விசித்ரா. “நான் தனியாள் எந்த குரூப்பிலும் இல்லை” என கெத்தாக சொல்ல, “ஏன்னா, உங்களை யாரும் சேர்த்துக்க மாட்டாங்க” எனச் சொல்லி அந்த பெருமிதத்தில் லோடு லோடு ஆக மண்ணை போட்டார் பிரதீப்.
அடுத்த வாரம் கேப்டனை தேர்வு செய்யும் நேரம் வந்தது. ஏற்கனவே இருந்த கேப்டனான சரவண விக்ரம் இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் மாறி மாறி நடந்து ஒரு வழியாகிவிட்டார். கேப்டனாக அவர் பட்ட கஷ்டங்களைக் கண்கூடாகப் பார்த்துமே எலிமினேஷனில் இருந்து தப்பிக்கவே சிலர் நான் நீ என போட்டி போட்டு கேப்டனாக வர சம்மதித்தனர்.
வேட்பாளர் பட்டியலில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட யுகேந்திரனுக்கு அடுத்தபடியாக ஜோவிகா பெயர் அடிபட்டது. சரியாக யோசித்து, முதிர்ச்சியாக செயல்பட்டு, திட்டமிட்டு செய்வதாக அவருக்கு விளக்கமும் கொடுத்தது பெரிய வீடு.
பிரதீப் கூல் சுரேஷின் பெயரை முன்மொழிந்த போது “இவன் சந்தோஷமா சொல்றானா, காண்டா சொல்றான்னு தெரியலையே” என கூல் சுரேஷ் கவுன்டர் அடிக்க சபை கலகலத்தது.
7 கல் விளையாட்டு போல தங்களின் வட்டங்களை அடுக்க வேண்டும். அதே நேரம் எதிராளியின் வட்டத்தையும் கலைக்க வேண்டும். பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் வன்மத்தை தூண்டுவதில் தான் ராஜாவாக இருக்கிறாரே, பின் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்.
ஒரு வழியாக தள்ளும் முள்ளுகளுக்குப் பிறகு யுகேந்திரன் ஜெயிக்க, ஆட்டத்தை கலைச்சிட்டு முதல்ல இருந்து ஆடுங்க என்பது போல் இந்த ஆட்டம் செல்லாது என பேசினார் மாயா. ஆனால் எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டிய சரவண விக்ரமோ நேராக பிக்பாஸ் முன்பாகச் சென்று “என்னை கிள்ளிட்டான்” என ஸ்கூல் டீச்சர் இடம் கம்ப்ளைன்ட் செய்வது போல் பிக் பாஸ் இடம் கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருந்தார்.
கமலிடம் பேசிய போது ஜோவிகா எதுலயும் தானே முன்னே இருக்க நினைக்கிறார் என விஷ்ணு கம்ப்ளெய்ன்ட் செய்தார். “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?” என கமல் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் உளறினார் விஷ்ணு.
இதையடுத்து பேசிய ஐஷு சுய புத்தி இல்லாதவர் என்ற பட்டத்தை தனக்கு கொடுத்ததற்கு பதில் ரவீனாவிற்கு கொடுத்திருக்கலாம். அது பொருந்தும் எனக் கூறிய போது சக்களத்தி சண்டை போல பொறி கிளம்ப ஆரம்பித்தது.
“ஒண்ணுமே இல்லாததுக்கு ஏதாவது ஒரு பட்டமாச்சு கொடுத்தாங்களேன்னு சந்தோஷமா தான் இருக்கு” என ஸ்கூல் சுரேஷ் பேச கமல் சிரித்தார்.
பின்பு ஏன் சாப்பாடு போடல என சின்ன வீட்டில் இருந்தவர்களிடம் கமல் விளக்கம் கேட்க, தன்ணி கூட கொடுக்கல சார்‘ என பெரிய வீட்டுக்காரர்கள் கண்ணீர் வடிக்க, இது மோசமான போர் உத்தியென கடிந்து கொண்டார் கமல்.
ஸ்ட்ரைக்கு முன்னறிவிப்பு இல்லாமல் செஞ்சது தப்பு என உபதேசம் செய்தார். “எதுக்கு தான் ஸ்ட்ரைக் பண்ணீங்க? இப்பயாவது நிஜத்தை பேசுங்க” என இறுதிச்சுற்று வந்ததும் கமல் கேட்க, “கன்டன்டுக்காக தான் செஞ்சோம்” என சின்ன வீட்டார் கோரசாக சொன்னார்கள்.
இதற்கு ‘சமத்து’ என பதில் அளித்து கமல் மீண்டும் அடுத்த நாளைக்கான எபிசோட்டை ஒத்தி போட்டார்.
கண்டன்ட் என்ற பெயரில் விரட்டி விரட்டி ஜெயில்தண்டனை என மிரட்டி மிரட்டி பிக் பாஸ் கண்டஸ்டன்டுகளை படாத பாடு படுத்தும் நிலையில், அதற்காக பயந்து அடுத்த வீட்டில் இருப்பவர்களின் வயிற்றுக்கு கூட உணவளிக்காது வன்மத்தை கக்கும் அளவு போட்டியாளர்களை பைத்தியம் பிடிக்க வைக்கிறார் பிக் பாஸ்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வந்த போது இருந்த ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவெனில் அங்கு இருப்பவர்கள் 24 மணி நேரம் கண்காணிக்கப்படுவார்கள் ஆனால் அவர்கள் இயல்பாக இருந்தார்கள். அவர்களுக்குள் வந்த எமோஷன் அனைத்தும் உண்மையாக தெரிந்தது. ஆனால் தற்போது கன்டென்ட் கொடுத்தாக வேண்டுமே என்பதற்காக அடுத்தவரை கொலை கூட செய்ய தயங்க மாட்டார்கள் போல என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் செல்கிறது பிக்பாஸ்.
சோறு போட மாட்டேன் என்ற ஸ்ட்ரைக் வரை சென்றது சற்று முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தனது அடிப்படையை விட்டு விலகுகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிக்பாஸின் முந்தைய நாள் எபிசோட் பற்றி படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.