பாத்ரூமை சுத்தமாக பராமரிப்பது என்பது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். குறிப்பாக சுகாதாரமின்மையின் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சுத்தத்தை பேணுதலே மிகச் சிறந்த வழியாகும். இதனை நன்கு அறிந்தவர்கள் வாரம் ஓரிரு முறை வியர்க்க, விறுவிறுக்க தேய்த்து தேய்த்து பாத்ரூம் கழுவுவதிலேயே டயர்ட் ஆகி விடுவர். பின், குளித்து விட்டு வருவதற்குள் மயக்கமே வந்துவிடும். அவ்வளவு எனர்ஜியை வேஸ்ட் செய்யாமல், மிக எளிமையாக சுத்தம் செய்து அழகாக்குவது எப்படி என இப்போது பார்க்கலாம்.

  • உப்புப் படிவது

பெரும்பாலும் உப்பு தண்ணீர் புழங்கும் இடங்களில் பாத்ரூமில் கரை பட்டால் அது அவ்வளவு எளிதில் போகாது. வேலைக்கு வெளியே செல்லும் அவசரத்திலும் சரிவர சோப்பு நுரையையோ தண்ணீரையோ வடியவைக்கத் தவறி விடும்போது இந்த உப்பு படிதல் ஏற்படுகிறது. அதேபோல் குளிக்கும் போது சுவற்றின் டைல்ஸ்களில் தெறித்த நீர் மற்றும் சோப்பு நுரையாலும் உப்பு படிதல் தவிர்க்க இயலாது.

  • உப்பு படிதலை நீக்க வெள்ளை வினிகர்

கழிவறை குளியல் அறையில் உள்ள படிந்து போன உப்புகளையும், கரைகளையும், அழுக்குகளையும் போக்க வெள்ளை வினிகர் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் வெள்ளை வினிகருடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இவற்றைக் கரைகளின் மீது தெளித்து 2 நிமிடங்கள் ஊற வைக்கலாம். பின் துடைத்து எடுக்கும் போது உப்பு படுதலோ, கரையோ இன்றி சுத்தமாக காணப்படும்.

  • பேக்கிங் சோடா

போதுமான அளவு தண்ணீருடன் பேக்கிங் சோடாவை கலந்து பேஸ்ட் ஆக செய்து கொள்ளவும். இந்த பேஸ்டினை அதிகம் கரைப்படிந்த இடங்களில் குறிப்பாக டைல்ஸ்களின் மீது தடவி ஒருநாள் இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் அந்த பேக்கிங் சோடா போட்ட இடங்களை சுத்தம் செய்து எடுத்து விட கரைகள் மாயமாகும்.

  • அமிலம்

டைல்ஸ்களை சுத்தம் செய்ய அமிலம் பயன்படுத்தப்படும். அந்த அமிலத்தில் தண்ணீர் கலந்து, அதனை நீர்த்துப் போக செய்யவும். பின், அதனை டைல்ஸ்கள் மீது தெளித்து, தேய்த்து, சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அமிலத்தை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை!. கைக்கு பாதுகாப்பு உறை அணியவும். குழந்தைகளுக்கு எட்டாத வகையில் அதனை வைக்க வேண்டும்.

  • டூத்பேஸ்ட்

பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பற்பசையில், கறைகளை நீக்கும் சக்தி உள்ளது. எனவே பற்பசையினை கறைபடிந்த டைல்ஸ் மீது தடவி 45 நிமிடங்கள் உலர விட்டு பின் சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • எலுமிச்சைச் சாறு

சிறிதளவு எலுமிச்சை சாற்றினை, போதுமான அளவு வினிகரில் சேர்த்துக் கொள்ளவும். அதில், தண்ணீர் ஊற்றி ஸ்பிரே பாட்டில் உதவியுடன் டைல்ஸ்களின் மீது தெளிக்கவும். பின்னர் அதனை லேசாக தேய்த்து, கழுவினாலே நல்ல நிறமாற்றத்தை காணலாம்.

  • கோலப்பொடி

போகமாட்டேன் என அடம் பிடிக்கும் கறைகளை, கோல பொடியைத் தூவி நன்கு ஊற விடவும். பின், அதனை ஒரு பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து விட கழிவறைகளில் படிந்து இருக்கும், அழுக்கு காணாமல் போகும். வழுக்கும் தரையும் சுத்தமாகும்.

  • சோப்புத்தூள்

துணிகளை துவைக்க பயன்படுத்தும் சோப்புத்தூளை கழிவறையில் நன்கு தூவி விடவும். பின் ஒரு பிரஷ் கொண்டு நன்கு அழுத்தி தேய்த்து, சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். ஆனால், கழுவும் போது கால் வழவழப்பால் வழுக்கி விட வாய்ப்புள்ளது. கவனம்!

  • கரைபடியாது பராமரிப்பது எப்படி?

கழிவறை மற்றும் குளியலறையை பயன்படுத்திய பின், அதில் நீர் தேங்காத வகையில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சோப்பு நீரோ, உப்பு நீரோ படியும்போது, இந்த கரை உருவாகக் கூடும். கழிவறை காற்றோட்டமாக இருக்கும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

The Karigai-யின் இந்த தகவலை பலருக்கும் பகிர்ந்து அவர்களின் எனர்ஜியையும் மிச்சப்படுத்துங்கள்.

Facebook
Instagram
YOUTUBE