குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய பேசிக் மேனர்ஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு பாலூட்டி, சோறூட்டி, தாலாட்டி, ஈ, எறும்பு கடிக்காமல் வளர்த்துவதுபற்றி குடும்பத்தில் பலரும் ஒரு தாய்க்கு சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், ஒரு தாய் தனது குழந்தைக்கு சொல்லித்தரவேண்டிய பல பேசிக் மேனர்ஸ் எனப்படும், அடிப்படை ஒழுக்கங்களை சொல்லித்தந்தால்தான் குழந்தை நல்லவராக வளர்த்த முடியும்.
அப்படி என்னென்ன சொல்லித்தர வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுள்ளது த காரிகை.
பேசும்போது கவனிப்பது
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இடைமறித்து பேசாமல் இருத்தல் என்பது பேசிக் மேனர்ஸ். பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் தான் சொல்ல வந்த கருத்தை முழுமையாக பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்து, பின்னர் கருத்தை சொல்ல கற்றுத் தர வேண்டும்.
மென்மையான வார்த்தைகள்
குழந்தைகளிடமோ, குழந்தைகள் முன்னிலையிலேயோ பேசும் வார்த்தைகள் மென்மையானதாக இருக்க வேண்டும். அவ்வப்போது தேங்க்யூ, ஸாரி, எக்ஸ்க்யூஸ் மீ ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அப்படி ஒரு இடத்தில் பேச வேண்டிய வார்த்தைகளை கடினமான வார்த்தைகளுக்குப் பதில் மென்மையாக பேசிக் கொண்டிருந்தால் குழந்தையும் மென்மையாகவே பேசும். குழந்தையும் பாசிடிவ் ஆக வளரும்.
முறைக்காகக் காத்திருக்க வேண்டும்
குழந்தைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒரே பொம்மை, ஊஞ்சல், உணவு ஆகியவற்றை பகிர்கிறார்கள் என்றால், தனக்கான முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குள், அழுது அடம்பிடித்து பிரண்டு அழும் குழந்தைகளாக வளர்த்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாமல் போகும்.
தோல்வி
தோல்விகளை பக்குவத்தோடு ஏற்றுக் கொள்ளுதல் என்பது குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கியமான மேனர்ஸ் ஆகும். தான் தோற்றதும் ஆட்டத்தைக் களைப்பது, தான் தோற்ற பின் யாரும் ஜெயிக்கக் கூடாது என நினைப்பது, அதற்காக தவறாக நடந்து கொள்வதெல்லாம் தவறான அணுகுமுறையாகும்.
சுய வேலைகள்
எழுந்ததும் தனது போர்வையை தானே மடிப்பது, தான் சிந்திய உணவை தானே துடைத்து சுத்தம் செய்வது, வேலைகளில் தன்னால் இயன்ற சிறிய உதவிகளை பிறருக்கு செய்வது ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
அனுமதி
ஒரு பொருளை எடுக்கும் முன்பு அது தனக்குக் கிடைக்குமா? என அனுமதி கேட்பது மிகவும் நல்ல குணம். யாரையும் கேட்காமல் பொருட்களை எடுப்பதோ, யாரிடமும் அனுமதி பெறாமல் வீட்டுக்குள் வருவதோ தவறான செயலாகும். யாரையேனும் தொந்தரவு செய்யும் வகையில் விளையாட்டுக்கள் விளையாட நேர்ந்தால், தான் இங்கு விளையாடுவதில் உங்களுக்கு ஒன்றும் அசவுகர்யம் இல்லையா? எனக் கேட்பது நல்லது.