இந்த IAS-க்கான வரதட்சணை என்ன தெரியுமா?
வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமே. ஆனாலும், இது தொடர்கதையாகித்தான் வருகிறது. அவரவர் தத்தமது வசதிக்கு ஏற்றார்போல், பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கும்போது தங்களது பல ஆண்டு, உழைப்பு, சேமிப்பு, அதன் கூடவே கொஞ்சம் கடன் என அனைத்தையும் செலவழிப்பர். 1 பவுன் முதல் 100 பவுன் வரையும், சில சமயம் கிலோக் கணக்கில் தங்கத்தையும் வரதட்சணையாகக் கொடுப்பதுண்டு. அதேபோல் அவரவர் வசதிக்கு ஏற்ப பைக், கார், விலை உயர்ந்த கார், வீடு, நிலம், சொத்துக்கள் என பலவற்றையும் கேட்டுப் பெறுபவர்களும் உண்டு. ஆனால், இது சட்டப்படி குற்றம் என்பதை மீண்டும் “The Karigai” நினைவூட்டுகிறோம்.
இந்த வரதட்சணைகள், மாப்பிள்ளை வீட்டாரின் சொத்து, குடும்பப் பின்புலம், தொழில், மாப்பிள்ளையின் படிப்பு, அயல்நாட்டு மேல்படிப்பு, சம்பாத்தியம் இவற்றை பொறுத்து அமையும். அப்படியிருக்க ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியே தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு வரதட்சணை போல் ஒரு நிபந்தனையை விதித்து பிரபலமாகியுள்ளார்.
யாருப்பா அது? நமக்கே பாக்கணும் போல இருக்கே?
அவர்தான், சிவகுருபிரபாகரன். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து-கனகா. இத்தம்பதியின் 30 வயதான மகன் சிவகுருபிரபாகரன். ஐஐடியில் எம்.டெக். முடித்த சிவகுருபிரபாகரனுக்கு உள்நாடு மட்டுமின்றி பல வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களும் அதிக சம்பளத்துடன் வந்து குவிந்தன. ஆனால், தனது லட்சியம் ஐஏஎஸ் ஆவதே என முடிவு செய்தார். அவ்வாறே படித்து 2018-ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். நெல்லை மாவட்ட சப் கலெக்டராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.
இவரது படிப்புக்கும், திறமைக்கும் வேலைவாய்ப்பு குவிந்தது போன்றே வரன்களும் குவிந்தன. ஆனால், அவை வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.காரணம் இவர் விதித்த நிபந்தனைகள் தான்.
அப்படி என்ன நிபந்தனை?
மணந்தால், ஒரு டாக்டர் பெண்ணைத் தான் மணப்பேன் என்று கூறினார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ஒரு டாக்டர் பெண் கிடைக்காதா? என கேட்கலாம். அங்கு தான் ட்விஸ்டே. அந்தப் பெண், வாரத்தில் இரு நாட்கள் தனது சொந்த கிராமத்தில் இலவசமாக கிராமத்தினருக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றுதான் அந்த டிவிஸ்ட். வாரத்தில் இருநாள் என்றால், மாதத்தில், 8 நாள் வருமானமும் போய்விடும் எனக் கருதி பல பெண் மருத்துவர்களும் நிராகரித்தனர். இறுதியாக கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற கனவில் மருத்துவம் பயின்ற ஒரு பெண், இவரை மணம் முடிக்க முன்வந்தார்.
பொண்ணு கிடைச்சாச்சு!
கிருஷ்ண பாரதி. விழுப்புரத்தில் மருத்துவம் பயின்றாலும் மற்றபடி வேலை செய்வதெல்லாம் சென்னைதான். சிவகுருவின் கோரிக்கைக்கு ஓ.கே. சொன்னார். எந்த கிராமத்துக்காக தன் திருமணத்தைத் தள்ளிப் போட்டாரோ, அதே கிராமத்தினரின் முன்னிலையில் சிவகுருபிரபாகரனுக்கும் – கிருஷ்ணபாரதிக்கும் திருமணம் ஆனது.
எதுக்கு இந்த கண்டிசன்?
சிவகுரு ஏற்கனெவே டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் பெயரில், கிராம வளர்ச்சிக் குழு ஒன்றை உருவாக்கியவர். அதன் மூலம் கிராமத்தினருக்கும், இளைஞர்களுக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி வந்தார். ஒட்டங்காடு கிராமத்தில் பெரிய ஏரியை ஊர்மக்கள் உதவியோடு தூர்வாரினார். அது கடல்போல் காட்சியளிப்பது கண்டு மகிழ்வுற்றார். விவசாயமும் கிராமமும் செழிக்கும் என மகிழ்ந்திருந்த போதுதான், கிராம மக்கள் விழிப்புணர்வு இல்லாததால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்படுவது கண்டு வேதனை அடைந்தார். ஆனால், தான் மருத்துவம் படிக்காததால், கிராமத்துக்கு உதவும் மருத்துவ மணமகளைத் தேடிப்பிடிக்க இப்படி ஒரு கண்டிசன் போட்டார் சிவகுரு.
சிவகுரு-பாரதி தம்பதியை “The Karigai”-யும் வாழ்த்துகிறது.! நீங்களும், கமென்ட் செக்சனில் வாழ்த்து கூறலாமே!