கோவையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன்னை பராமரிக்க தவறிய மகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாதம் தோறும் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் பெற உள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளராக இருந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவியின் பெயர் ஆராயி. பொன்னுசாமி மற்றும் ஆராயியின் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.

தற்போது ஆராயியின் வயது 52. மூத்த மகள் கவிதா 35, இரண்டாவது மகள் மஞ்சு 33, மூன்றாவது மகள் கௌரி 31 வயதில் உள்ளனர்.

பணியில் இறந்த தூய்மை பணியாளர்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பொன்னுசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். பணியில் இருக்கும் போதே அவர் உயிரிழந்ததால், கருணையின் அடிப்படையில் அவரது வாரிசுக்கு அரசு வேலை பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 3 மகள்களில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என தீர்மானமானது.

இதை அடுத்து அப்போது 21 வயதான மகள் கௌரிக்கு, சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

வாரிசு வேலை

தந்தையின் பணியை காரணம் காட்டி கருணை அடிப்படையில் வாரிசு வேலை கிடைத்ததால், அவர் தனது தாயை பராமரித்து இருக்க வேண்டும். ஆனால், அவரது தாய் ஆராயி பராமரிப்பின்றி விடப்பட்டதால் மனம் உடைந்த தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆண் வாரிசு இல்லாத நிலையில் பெண் வாரிசே தாயை பராமரிக்க கடமைப்பட்டவர் என அந்த வழக்கில் தாய் ஆராயி சுட்டிக்காட்டினார்.

எனது 3வது மகள் அரசு பணியில் போதிய வருமானத்துடன் இருப்பதால், 3வது மகளான கௌரிதான் தனக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் என்றும் இதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கை, வால்பாறை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளியன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜீவனாம்சம் தரவேண்டிய பெண் வாரிசு யார்?

அதில், “ஆண் வாரிசு இல்லாததால் பெண் வாரிசு ஜீவனாம்சம் தர கடமைப்பட்டவர் என்றும், மற்ற 2 மகள்களுக்கும் போதிய வருமானம் இல்லாத நிலையில், அரசு பணியில் இருக்கும் கௌரி தனது தாய் ஆராயிக்கு ஜீவனாம்சம் தர தகுதி உடையவர்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்ந்த நாளான 2022 நவம்பர் 18ஆம் தேதி முதல் மாதம் தோறும் 20,000 ரூபாய் என கணக்கிட்டு, இதுவரை 16 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.3,20,000 ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் மாதம் தோறும் 20,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்றும், ஆராயியின் நீதிமன்ற செலவுக்காக ரூ.15,0000 கொடுக்க வேண்டும் என்றும் வால்பாறை நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE