தீரா த்ரிஷா… 20 ஆண்டுகளின் கனவு ராணி
த்ரிஷாவின் முதல் பேட்டி ஞாபகம் இருக்கா? அவரின் பள்ளி காலத்துல(2000) விஜய் டிவியின் ‘நய்யாண்டி தர்பார்’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டாங்க. அப்போ நெறியாளர் யூகி சேது, ”சினிமாவில் உங்களை பார்க்கலாமா?”னு கேட்டதுக்கு த்ரிஷா சொன்ன பதில், “சினிமா is not my cup of tea. மாடலிங் மட்டுமே பண்ண போறேன். நிச்சயமா சினிமாவுக்குள்ள வர மாட்டேன்”. ஆச்சரியமா இருக்குல்ல? இந்த உலகம் யாருக்கு என்ன கொடுக்கும்ங்குறதை யாராலயுமே தீர்மானிக்கவே முடியாது.
த்ரிஷா சினிமா உலகில் கால் வெச்சு 20 ஆண்டுகள் ஆயிடுச்சி. நாட்கள் மட்டும்தான் நகருது. ஆனால் த்ரிஷாவின் வயசு பின்னாடி தான் போயிட்டே இருக்கு. இன்னும் 10 வருஷம் கழிச்சு அவர் ஸ்கூல் பொண்ணு வேஷத்துல நடிச்சாலும் நடிப்பார் (96 படத்துல ஸ்கூல் பொண்ணு வேடத்துக்கு த்ரிஷாவையே நடிக்க வெச்சு இருக்கலாம். ஐடியா இல்லாத பசங்க). எப்படிங்க உங்களால இத்தனை வருஷமா இப்படியே இருக்க முடியுது? அப்படினு பலர் த்ரிஷா கிட்ட நேரடியாவே கேட்டு இருக்காங்க. அதுக்கு அவர் கொடுக்கும் ஒரே பதில் ‘ஸ்மைல்’.
த்ரிஷா முதலில் நடித்த படம் ’லேசா லேசா’. ஆனால் முதலில் வெளியானது ’மௌனம் பேசியதே’தான். லேசா லேசாவில் ஹீரோயின் கேரக்டர். மௌனம் பேசியதேவில் துணை நடிகை. அதுக்கு முன்னாடி ஜோடி படத்துல ஒரு குட்டி ரோல் (சிம்ரனுக்கு தோழி). அதுக்கு முன்னாடி ‘மிஸ் சென்னை’, ‘மிஸ் சேலம்’ அப்படினு படிப்படியா சினிமாவுக்குள்ள நுழைஞ்சவங்கதான் த்ரிஷா. ஒரு பின்புலமும் கிடையாது. ஆனால் கிட்டத்தட்ட 20 வருஷமா தமிழ் சினிமா உலகை தன்னோட கட்டுப்பாட்டுல வெச்சிருக்காங்க. உலகத்துல வேற எந்த மொழியிலயும் கூட ஒரு நடிகை இத்தனை வருஷமா உச்ச நட்சத்திரமாவே இருப்பாங்களாங்குறது சந்தேகம்தான். (நயன்தாராவை பத்தி அப்பறம் பேசுவோம்).
ஒவ்வொரு முறை சினிமா உலகம் த்ரிஷாவோட கேரியர் முடிஞ்சுபோச்சுனு சொல்லும்போதும் அவங்க எடுக்கற விஸ்வரூபம் அந்த பேச்சுக்கு எல்லாம் அசால்ட்டா முற்றுப்புள்ளி வெச்சுடும். அப்படி சமீபத்துல நீங்க பார்த்த ஒரு விஸ்வரூபம்தான் ‘பொன்னியின் செல்வன்’. குந்தவை அப்படிங்குற ஒரு வரலாற்று பேரழகியை ‘பொன்னியின் செல்வன்’ நாவல்ல கல்கி கண்ணா பின்னானு வர்ணிச்சிருப்பாரு. அந்த உருவத்தை அப்படியே கண்முன்னாடி கொண்டுவந்து நிறுத்துனவங்க த்ரிஷா. (இவங்களை பார்த்த உடனே கார்த்தி உளறுனதுல தப்பில்லைதானே?)
இந்த நிலையிலதான் த்ரிஷா மீண்டும் விஜய்க்கு ஜோடியா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்காங்க. 18 வருஷத்துக்கு முன்னாடி ஜோடியா நடிச்ச நடிகரோட, மீண்டும் நடிக்கும் ஹீரோயின்களுக்கு அந்தப் படத்துல என்ன மாதிரியான ரோல் கொடுக்கப்படும்னு ‘அண்ணாத்த’ படத்தை பார்த்தா தெரிஞ்சுக்கலாம். ஆனா த்ரிஷா இன்னமும் விஜய்க்கு ஜோடியா ஒப்பந்தம் ஆகுறாங்கன்னா இதுதான் த்ரிஷாவோட மிகப்பெரிய சாதனையே.
இதே இளமையான த்ரிஷாவை, இன்னும் 10 வருஷம் கழிச்சு, இதே மாதிரி இளமையாவே பார்க்கனும்ங்குறதுதான் ரசிகர்களோட கனவா இருக்கு. சீக்கிரமே #30YearsOfTrisha கொண்டாடுவோம் த்ரிஷா.