மீனம்மா, மீனம்மா… உன் கண்கள் மீனம்மா..! என இவர் கண்ணழகில் மயங்கிய 90’s கிட்ஸ்கள் இன்னமும் கூட கிரக்கத்தில் இருந்து மீளவில்லை. அழகில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஒரு சகாப்தம் படைத்தவர் மீனா!

“ரஜினி அங்கில்“  என்ற மழலை மாறாத அழைப்பில் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் மீனா. “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் ரோசியாக நடித்த பேபி மீனாவுக்கு அது 13-வது படம். முதல் படம் 1982-ல் “நெஞ்சங்கள்” என்ற படமாகும். பிறந்தநாள் விழா ஒன்றில் மீனாவின் சுட்டித்தனம் கண்டு மனம் மகிழ்ந்து போன நடிகர் சிவாஜிகணேசன் தனது படங்களில் குட்டி மீனாவை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டில் நடிகர் ரஜினியின் “எங்கேயோ கேட்ட குரல்” படத்திலும் நடித்து அசர வைத்தார்.

தந்தை ஆந்திரா, தாய் கேரளா, பிறந்தது சென்னை என்பதால் மும்மொழியிலும் நடித்த மீனா இந்தி திரையுலகிலும் தடம் பதித்தார். குழந்தை நட்சத்திரமாக மட்டும் 45 திரைப்படங்களில் நடித்துள்ளார் மீனா. சோலையம்மா என்ற கதாப்பாத்திரத்தில் மக்கள் மனதில் மீண்டும் ஹீரோயினாக இடம்பிடித்தார் நடிகை மீனா. கஸ்தூரி ராஜாவின் என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுடன் நடித்திருந்தார். குட்டி மீனாவா இது? என வியந்து கேட்குமளவு நடிப்பில் தன் திறமையைக் காட்டியிருந்தார் சோலையம்மா.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மீனா, வைத்தீஸ்வரி வானவராயன் கதாப்பாத்திரத்தில் அதே ரஜினியுடன் காதலியாகவும் மனைவியாகவும் நடித்திருந்தது “எஜமான்” திரைப்படம். அதன் பின் வீரா, தாய் மாமன், நாட்டாமை என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களையே கால்ஷீட்-காக காக்க வைத்தார் மீனா.

கூலி, நாடோடி மன்னன் படங்களை அடுத்து, முத்து படத்தில் ரங்கநாயகியாக ராணி வேடத்தில் வந்து நடிப்பில் ரஜினியைப் போட்டிக்கு அலைத்தார். ரஜினியை “என் முத்தா, என் தொங்கா“ என கொஞ்சுவதிலும் சரி, மலையாளம் தெரியாத ஊரில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்த சுட்டித்தனத்திலும் சரி, ஹீரோயினாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் சண்டையிட்டு பிரிந்து வாழும் மனைவியைப் போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் மீனா.

வானத்தைப் போல, சிட்டிசன், ரிதம், தெனாலி, வில்லன் என சற்றே சரிந்த அவரது திரைப்பட  வாழ்க்கையின் கிரேப்-ல் திடீரென உயர்த்திவிட்ட மற்றொரு மைல்கல் திரிஷ்யம். இரண்டரை வயது குழந்தையாக நைனிகாவை வைத்துக் கொண்டு அவர் நடித்துக் கொடுத்த திரிஷ்யம் படம் மெகா ஹிட்டடித்தது. அதற்கடுத்த பாகத்திலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் மீனா. சமீபத்தில் அண்ணாத்தேவை அடுத்து மீண்டும் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

40 ஆண்டு திரையுலகில் 94 திரைப்படங்களில் நடித்துள்ள மீனா விரைவில் அந்த எண்ணிக்கையில் செஞ்சுரி அடிக்கப் போகிறார். அவரது திரையுலக பயணம் இன்னும் பல மைல்கற்களைத் தொட “The Karigai“-யும் வாழ்த்துகிறது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE