42 கிலோ எடையை குறைத்த அஜித்.. அடேங்கப்பா!
தனது உடல் எடையில் 42 கிலோவை குறைத்ததாக கூறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகர் அஜித். அவர் இதனை எப்படி செய்தார்? அவருடைய உணவுப் பழக்கம் என்ன? அவருடைய தினசரி வொர்க்-அவுட் என்ன என்பதை அவரே சொல்லியிருக்கிறார். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அஜித்தும் உடல் எடையும்
ஆரம்ப காலத்தில் இளமையாக ஒல்லியாக இருந்த நடிகர் அஜித்தின் எடை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. அவரது முதுகுத்தண்டில் ஏகப்பட்ட ஆபரேஷன் செய்திருப்பதால், அவரால் வொர்க்-அவுட் செய்து உடல் எடையை குறைக்க முடியாத நிலை இருந்தது. இதனால், அதிகரித்த உடல் எடையுடன் இருந்தாலும், அவருடைய ரசிகர் பட்டாளம் மட்டும் குறையவே இல்லை.

அஜித்தின் கார் ரேஸ் மீதான ஆர்வம்
ஒருபுறம் சினிமாவில் கவனம் செலுத்தினாலும், தன்னுடைய பெர்சனல் ஃபேவரைட்டான கார் ரேஸிலும் அஜித் தனி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, சமீப நாள்களாக அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கார் ரேஸில் பங்கெடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார். இதையேதான் அவருடைய உடல் எடை குறைப்புக்கும் அஜித் காரணமாக சொல்லியிருக்கிறார்.

உடல் எடை குறைப்பு ஏன்?
தனியார் தொலைக்காட்சிக்கு அஜித் கொடுத்த பேட்டி இதோ,
கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். கூட்டு உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டேன். நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன். பந்தயத்துக்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன். கார் பந்தயத்துக்காகவே எனது உடற்தகுதியை நான் பராமரித்து வருகிறேன்.

இது என்ன சாதாரண விஷயமா?
வெறும் 8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைப்பது என்ன சாதாரண விஷயமா? இந்த வயதில் அஜித்தால் இதனை செய்ய முடியுமானால், உங்களாலும் முடியும்தானே? உடனே எடை குறைப்பை ஸ்டார்ட் பண்ணுங்க.