தங்கம் வாங்க சரியான நேரம்.. உடனே போங்க
தங்க நகைகள் வாங்குவதற்கு சரியான நேரம் என்று ஏதும் கிடையாது. நமக்கு எப்போது தேவையோ, அதுவே வாங்குவதற்கான நேரம். ஆனால், தங்கத்தின் விலையில் சிறு ஏற்ற இறக்கங்கள் வரும்போது, சிறுக சிறுக அதனை வாங்கி வைக்கலாம் என்று முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம். ஏன் தெரியுமா?

தங்கத்தின் விலை வீழ்ச்சி
சென்னை சந்தையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் ரூ.295 குறைந்து ரூ.8,750ஆக விற்பனையாகிறது. அதாவது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.70,000ஆக உள்ளது. கடந்த மாதம் ரூ.74,320 வரை உயர்ந்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.4,000 வரை குறைந்துள்ளது.

தங்கம் விலை குறைவது ஏன்?
தங்கத்தின் விலையை எப்போதுமே சர்வதேச சந்தைகள்தான் தீர்மானிக்கின்றன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றபோது, அவருடைய அதிரடி பொருளாதார நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் நிலையின்மை ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் மக்கள் திரும்பினர். இதனால், தங்கம் விலை உயர்ந்து. தற்போது, சீனாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டிருப்பதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இப்போது தங்கம் வாங்க வேண்டும்?
பங்குச்சந்தை, தங்கம் மாதிரியான முதலீடுகள் எப்போது உயரும்? எப்போது குறையும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆகவே, சிறுக சிறுக வாங்கும் பழக்கத்தினை பெரும் முதலீட்டாளர்கள் கொண்டிருக்கின்றனர். இதனால், விலை உயர்ந்தாலும், இறங்கினாலும் அவர்கள் கவலை கொள்வதில்லை. விலை இறங்கும்போது சற்று அதிகமாக வாங்கி சேமித்து வைப்பர். எனவே, தங்கம் விலை கடும் வீழ்ச்சியை கண்டிருக்கும் இன்று வாங்கி சேமிக்கலாம்.

இந்தப் பதிவு 2025ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி எழுதப்பட்டது. நீங்கள் படிக்கும் தினத்தன்று தங்கம் விலை என்ன என்பதை ஆராய்ந்து வாங்கச் செல்லுங்கள்.