இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதற்கான காரணம் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியாவின் அறிவிப்பு
பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்வது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இன்று மதியம் இருதரப்பு உயர் அதிகாரிகள் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போரை நிறுத்திக் கொள்ளும்படி பாகிஸ்தான் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாலை 5 மணி முதல் தரை, வான், கடல் வழித் தாக்குதல்களை இந்தியா நிறுத்திக் கொண்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீடு
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்த, அமெரிக்க இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் குறித்து இந்திய அறிவிப்பதற்கு முன்பே X போஸ்ட் செய்த டிரம்ப், இரு நாடுகளும் போரை நிறுத்த சம்மதித்திருப்பது சாதூர்யமான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அமெரிக்காவின் தலையீடு இதில் எந்த அளவுக்கு இருந்தது என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
மீண்டும் பேச்சுவார்த்தை
தாக்குதல்களை நிறுத்தியிருக்கும் இந்தியா, “இனி தீவிரவாத தாக்குதல்கள் நடந்தால் கூட அது போராகவே கருதப்படும்” என்று பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் 12ஆம் தேதி இது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
போர் நிறுத்தத்தால் மகிழ்ச்சி
“போரில் பங்குபெறுபவன் எவனும் அதனை கொண்டாட மாட்டான். அதனை கொண்டாடுபவன் எவனும் போரில் பங்குபெற மாட்டான்” என்று ஒரு பேச்சு உண்டு. அதன்படி, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் அதன் வலி புரியும். தற்போது இரு நாடுகளும் போரை நிறுத்த சம்மதித்திருப்பதற்கு, காரிகை குழுமம் முழுமையாக மகிழ்ச்சி தெரிவிக்கிறது.