அடி மேல் அடி… பதறும் பாகிஸ்தான்… திணற விடும் இந்தியா
பகல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது கடுமையான தடைகளை இந்திய அரசு விதித்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தானுக்கு ஏற்படப்போகும் நெருக்கடிகளை பார்க்கலாம்.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து
பகல்காமில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற அடுத்த நாளே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. கார்கில் போர் சமயத்தில் கூட தண்ணீர் விட மாட்டோம் என்று சொல்லாத இந்தியா, இந்த முறை வெகுண்டெழுந்து நீர் ஒப்பந்தத்தை முறித்திருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஆறு சிந்து நதிக்கிளைகளில் மூன்று இந்தியாவுக்கு, மூன்று பாகிஸ்தானுக்கு என்று பிரித்து போடப்பட்ட ஒப்பந்தம்தான் ‘சிந்து நதிநீர் ஒப்பந்தம்’. இதனை ரத்து செய்திருப்பதன் மூலம் பாகிஸ்தானின் ஜீவ நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகளில் நீர் வறட்சி ஏற்படும். இது பாகிஸ்தானுக்கு நெருக்கடியாக அமையும்.
பாகிஸ்தானுக்கு வான்வெளி மூடல்
பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் மற்றும் பாகிஸ்தான் வழியாக வரும் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழையக்கூடாது என்று இந்தியா தடை விதித்துள்ளது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு இந்தியாவை சுற்றிச்செல்ல அதிக செலவு ஏற்படும்.

பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நாளே, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டது. மாநில அரசுகள் பாகிஸ்தானியர்களை பட்டியலெடுத்து வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, இந்திய மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்டவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்தவர்கள் என அனைவரும் வெளியேறினர்.
பாகிஸ்தான் உடனான வர்த்தகம் ரத்து
பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளையும் இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்று இன்று காலை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், அஞ்சல், பார்சல் சர்வீஸ்களையும் இந்தியா நிறுத்தியுள்ளது. இங்கிருந்து பாகிஸ்தானுக்கோ, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கோ எந்த ஒரு வர்த்தக தொடர்போ, பண்டமாற்ற தொடர்போ இருக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு என்ன நஷ்டம்?
போர் என்று வந்துவிட்டால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் தாக்கத்தைவிட நீரை நிறுத்துவதிலும் வர்த்தகத்தை நிறுத்துவதிலும் அதிக தாக்கம் ஏற்படும். இது கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டு ஆட்சியாளர்களை நிலைகுலையச் செய்யும். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் அரசுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்த முடிவை இந்தியர்கள் வரவேற்கின்றனர்.