தோனி ஓய்வு பெற 6 முக்கிய காரணங்கள்
43 வயதாகும் மகேந்திர சிங் தோனி, CSK அணியின் கேப்டனாக இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார். ரசிகர்களுக்காக அவர் விளையாடுகிறார் என்பதை பாராட்டியே ஆக வேண்டும் என்றாலும், CSK அணியின் மோசமான செயல்பாட்டுக்குப் பின் நாம் சில சுய பரிசோதனைகளை செய்ய வேண்டிய தேவைகள் இருக்கிறது. அதனை படிப்படியாக பார்ப்போம்.

வயதும் உடல்சார்ந்த சிக்கல்களும்
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், ஒரு வயதுக்கு மேல் உடல்திறன் சரிவர ஒத்துழைக்காது. தோனியிடம் அதனை தற்போது பார்க்க முடிகிறது. பீக் நேரத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட தோனி, தற்போது கொஞ்சம் சுணக்கம் காட்டுகிறார். இது CSK அணியையும் பாதிக்கிறது.

பேட்டிங் செய்யத் தயங்குவது
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முன்னின்று வெற்றியை பெற்றுக் கொடுத்த தோனி, தற்போது தன்னைத் தானே பின்னுக்கு தள்ளிக் கொள்கிறார். பேட்டிங் வரிசையில் அவர் 7ஆவது இடத்தில் களமிறங்குவதை ரசிகர்களே விரும்புவதில்லை.

ராஜா ராஜாவாகவே வெளியேற வேண்டும்
ஒரு காலத்தில் மன்னனாக ஆட்சி செய்த தோனி, தற்போது விமர்சனங்களுக்குள்ளாகிறார். இதற்கு காரணம் அவர் இன்னமும் விளையாடி வருவதுதான் என்கின்றனர் விமர்சகர்கள். 2023ஆம் ஆண்டு CSK கோப்பையை வென்றதோடு தோனி வெளியேறியிருந்தால், ரசிகர்கள் மனதில் என்றும் ராஜாவாகவே வாழ்ந்திருப்பார்.

CSK அணிக்கு இளம் ரத்தம் தேவை
நடப்பு ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் பொரெல், அசுடோஷ் ஷர்மா, ப்ரியான்ஷ் ஆர்யா போன்ற Uncapped வீரர்களை வைத்து போட்டிகளை வெல்கின்றனர். ஆனால், CSK அணியில் Uncapped பிளேயராக தோனி இடம்பிடித்திருக்கிறார். அந்த இடத்தில் மற்ற இளம் வீரர்களை களமிறக்கலாம்.

அணி பயிற்சியாளராக பங்களிக்கலாம்
தோனியின் திறமையும் அனுபவமும் CSK அணிக்கு தேவை என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால், அதனை அவர் களத்தில் வந்து நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லைதானே. அணியின் பயிற்சியாளராகி அவர் CSKவை வெற்றி பெற செய்யலாம். ஒரு மெண்டராக தோனியால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நடப்பு ஐபிஎல் ஒரு சிறந்த உதாரணம்
2025 ஐபிஎல் தொடரில் CSK அணியின் தோல்விக்கு தோனி காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், தோனியின் மீது கொண்ட நம்பிக்கையால், அணி நிர்வாகம் வீரர்களை ஏலம் எடுப்பதில் கோட்டை விட்டுவிட்டது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் நிர்வாகமும் தோனி தோனி என்று அவரையே சுற்றி வந்ததற்கான வினை இது.
இவற்றை கருத்தில் கொண்டு தோனி விலகி நிற்க வேண்டுமா? அல்லது தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பதை நீங்களே சொல்லுங்கள்.