ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவையா?
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில், நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இது அவசியம் என்று ஒரு சிலரும், இது ஜாதியை வளர்க்கும் போக்கு என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையா? அதனால் இருக்கும் பயன்கள் மற்றும் சிக்கல்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன்?
நமது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக, 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அப்போது நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடைசியாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்டது.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம்
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, அவர்களின் ஜாதி விவரங்களும் கேட்டு அறியப்பட்டு, பதிவு செய்யப்படும். இதன் மூலம், நாட்டில் மொத்தம் எத்தனை சதவீத BC, SC, ST மக்கள் இருக்கின்றனர், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் சரியாக அளிக்கப்படுகிறதா என்பதை ஆட்சியாளர்கள் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த ஜாதியினர் அதிகம் இருக்கின்றனர், அவர்கள் எந்தப் பகுதியில் அதிகம் இருக்கின்றனர், அவர்களுக்கான தேவைகள் என்ன என்பதை அறியவே ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் தற்போதைய தேவை என்ன?
தற்போது வரை, ஜாதிய ரீதியிலான திட்டங்கள் அனைத்தும் 1931ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வகுக்கப்பட்டு வருகின்றன. பல ஜாதியினர் தங்களது எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக கூறி அதற்குரிய பிரதிநிதித்துவத்தை கேட்கின்றனர். ஆனால், அதனை வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. தற்போது, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம், புள்ளி விவரன்களை சரியாக அறிந்து கொள்ள முடியும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பின் நன்மைகள் என்ன?
1. திட்டங்களையும், நிதியையும் சரிவர பகிர்ந்து அளிக்க ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவுகிறது.
2. தற்போது இருக்கக்கூடிய இட ஒதுக்கீட்டு சதவீதங்களை திருத்தி, எந்த பிரிவினருக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு தேவை என்பதை தெளிவாக தீர்மானிக்க முடியும்.
3. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பின் ஏற்படும் மாற்றங்களால், பல பிரிவினர் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னேற வழி ஏற்படும்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருக்கும் சிக்கல்கள் என்ன?
1. சமூகத்தில் ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கும் ஜாதிய பிளவுகள் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.
2. அரசியல் கட்சிகள் இந்த புள்ளி விவரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஜாதி அரசியல் செய்யக்கூடும்.
3. நாட்டில் ஆயிரக்கணக்கான ஜாதிகள் மற்றும் உட்பிரிவுகள் உள்ளன. அவற்றை சரியாக கணக்கிடுவதே பெரிய சவாலாகும்.
4. புதிய மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்தால், சமூகத்தில் கலவரங்கள் ஏற்படும்.
சமூக மாற்றத்திற்கான முதல் படி
ஜாதி குறித்த தெளிவான புரிதலும், அதனை அழித்தொழிக்கும் முறைகளையும் அறிந்தவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். அத்தகைய வலிமையான ஆயுதமான இட ஒதுக்கீட்டை பாரபட்சமின்றி வழங்க ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக மிக அவசியமாகிறது.
சிறிய சிக்கல்களை கலைந்து, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம், சமூகநீதியை நிலைநாட்டி நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். இதையே ஒருமனதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்துகின்றன. ஆகையால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைத்து, சமூகநீதியை ஓங்க செய்வோம்.