அப்பா மரணம், பாலியல் தொல்லை, கட்டாய கைது, தகுதி நீக்கம்.. வினேஷ் போகத் யார்?
ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப் பட்டதை எதிர்த்து வழக்கு நடைபெற்று வருகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக ஒலிம்பிக்கில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டி நடைபெற இருந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
யார் இந்த வினேஷ் போகத்?
புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்தில் பிறந்தவர் இவர். கீதா போகத் குமாரி போகத் ஆகியோரின் அடிச்சுவடுகளை பின்பற்றி மல்யுத்தத்தில் தனக்கென தனி இடத்தையும் பிடித்துள்ளார்.
மல்யுத்த விளையாட்டை இவருக்கு அறிமுகப்படுத்தியது இவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவிர் சிங்.
பாலின பாகுபாட்டை தகர்த்தவர்
இது ஆண்களுக்கான விளையாட்டு என்று கருதிய போக்கை மாற்றி வினேஷ் போகத்தை மல்யுத்தத்துக்கு தயார் செய்தார் அவரது மாமா மகாவீர்.
வினேஷுக்கு 9 வயதாக இருந்தபோது அவரது தந்தை அகால மரணம் அடைந்தார்.
மாமா மற்றும் தகுந்த பயிற்சியாளர்களின் சிறந்த வழிகாட்டுதலால் வெற்றி பெற்றார்.
குவித்த வெற்றிகள்
காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத்.
இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான பிரிஜ் பூசன் சிங்- பாலியல் தொல்லைகள் அளித்தமைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார். இதனால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்.
இந்த போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய போதும் அரசு இவருக்கு ஆதரவாக இல்லை.
உலகின் கவனம் ஈர்த்தார்
காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது உலக அரங்கில் பேசு பொருளானது.
மத்திய அரசு தனக்கு வழங்கிய கேல்ரத்னா அர்ஜுனா விருதுகளை திரும்ப கொடுத்தார்.
காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் உடல் எடையை குறைத்து மீண்டும் மல்யுத்தம் போட்டிகளுக்கு தயாரானார்.
100 கிராம் கூடுதலானது பிரச்சனை
ஒலிம்பிக்கில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில் அவர் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகவும் 50 கிலோ எடைப் பிரிவில் அவர் பங்கேற்க இயலாது என்றும் கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வெள்ளியாவது கிடைக்குமா?
கடினமாக போராடி இறுதி சுற்று வரை சென்று அவருக்கு வெள்ளி பதக்கம் ஆவது கிடைத்திருக்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வாதம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக தங்கப்பதக்கம் அமெரிக்க வீராங்கனைக்கும் வெள்ளிப் பதக்கம் யாருக்கும் இல்லை என்றும் வெண்கல பதக்கம் அடுத்து இருக்கும் 2 பேருக்கு வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
உலகத்தையே ஆளக்கூடியவர், தற்போது ஆனால் முடக்கப்படுகிறார். இவர் வெற்றி பெற்றால் பிரச்சினைகளின் போது வாய் திறக்காத பிரதமர் மோடி தற்போது எப்படி வாழ்த்து தெரிவிப்பார் என்று அவரது நண்பரும் வீரருமான பஜ்ரங் புண்யா கேள்வி எழுப்பியுள்ளார்.