தற்போது உள்ள வெயிலின் நிலவரம் வெளியே செல்லும் மக்களை பாதி ஆம்லெட்டாக மாற்றி தான் வீட்டுக்குள் அனுப்புகிறது.

வழக்கத்தை விட இந்த முறை வெயில் அதிகம் என மக்கள் எங்கு சென்றாலும் வெயிலை பற்றிய பேசும் நிலை தான் உள்ளது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன், செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், இந்த முறை தான் தமிழ்நாட்டிலேயே அதிக அளவிலான வெப்பம் பதிவாகி இருக்கிறது என்பதை ஏற்பதற்கு இல்லை என்றார்.

ஏனென்றால் கடந்த 2003 ஆம் ஆண்டு இதைவிட அதிக வெப்பம் சென்னையில் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது 43 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்ப நிலை இருந்தாலும், 2003 ஆம் ஆண்டு 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கொளுத்தியதாகவும் கூறினார்.

வெயில் நல்லதா?

எவ்வளவுக்கு எவ்வளவு வெயில் அடிக்கிறதோ, அவ்வளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரமணன் கூறினார்.

இந்தியாவை பொருத்தவரை சென்னையில் அதிக வெயில் அடிக்கும்போது ராஜஸ்தானில் வெப்பம் குறைவாக இருக்கும்.

இது தென்மேற்கு பருவக்காற்று உருவாக்கி, தமிழகத்தில் மழை பெய்ய ஏதுவான சூழ்நிலை அமைக்கும் என்றும், இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே நன்மை தரும் ஒரு விஷயம் என்றும் கூறினார். ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வெயில் அதிகம் உணரப்படுவது ஏன்?

என்னதான் வெயில் சுட்டெரித்தாலும் முன்பை விட மக்கள் இப்பொழுது பெரும்பாலும் ஏசி, ஏர் கண்டிஷனர் என மாறிவிட்டனர். நிழலில் வேலை செய்துவிட்டு வெளியே வரும் போது, அவர்கள் அதிக வெப்பத்தை உணர்வதாக சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

இதுதான் தற்போது வெப்பம் அதிகரித்திருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் கூறினார்.

மே 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே இந்த வெயில் நல்லது என்றும் ரமணன் தெரிவித்தார்.

Facebook
Instagram
YOUTUBE