சிவன்மலை சித்தர் யார் யார் கண்ணுக்கு தெரிவார்?

மேரு மலையை வில்லாக பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு பகுதிதான் சிவன்மலை ஆனதாக கூறுகிறது ஸ்தல புராணம்.

பார்வதி, அகத்தியர் ஆகியோர் சிவனை நோக்கி தவம் செய்த தலம்.

வள்ளி மலைக்குச் சென்று வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் வள்ளியுடன் குடிபுகுந்த இடமாக இது பார்க்கப்படுகிறது.
எனவே தான், முருகன் வள்ளியுடன் ஒரே கருவறையில் மண கோலத்தில் உள்ளார்.

அமைவிடம்

திருப்பூர் காங்கேயத்திற்கு அருகில் உள்ளது சிவன் மலை.

பெயர் சிவன்மலையாக இருந்தாலும், இங்கு அமைந்துள்ளது சுப்பிரமணியர் ஆலயம்.

தொரட்டி மரம் இங்கு தலவிருட்சம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற இங்கு, 18 சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் தங்கி இருந்த்தாக சொல்லப்படுகிறது.

சிவன்மலை மீதுள்ள கோயிலுக்கு செல்ல 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் மலைப்பாதையில் சாலை அமைக்கப்பட்டு, கோவிலுக்கு பேருந்தும், கார் வேன் சென்று வர தார்சாலையும் உள்ளது.

கோவிலின் சிறப்பு

இந்த கோவிலில் உள்ள சிறப்பு அம்சமே இங்கு உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி தான்.

பக்தர்களின் கனவில் வரும் முருகப்பெருமான் ஆண்டவனின் உத்தரவு பெட்டியில் ஏதேனும் ஒரு பொருளை வைக்கும்படி அறிவுறுத்துவாராம்.

உதாரணத்துக்கு ‘தண்ணீர்’ என கனவில் வந்து கூறி உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைக்கும் படி சொன்னால், அந்த தண்ணீரால் உலகுக்கு ஏதும் ஆபத்து வரக்கூடும் அல்லது வறட்சி வரக்கூடும் என்ற எச்சரிக்கையை முன்கூட்டியே அறிவுறுத்தும் விதமாக இது அமையுமாம்.

ஆனால் அந்த உத்தரவு பெட்டிக்குள் என்ன வைக்க வேண்டும் என வந்து யாரேனும் தனது கனவில் வந்ததாக கூறினால் அதனை கோவில் நிர்வாகம் நம்பாது. மற்றபடி ஒரு பூஜை வைத்து ஆண்டவனின் உத்தரவு கேட்டுக் கொள்ளும் வகையில் பூ எடுத்துப் பார்த்து பெட்டிக்குள் இந்த பொருளை வைப்பது குறித்து கோவில் நிர்வாகம் முடிவு செய்யுமாம்.

வேறுபாடு

மற்ற கோவில்களில் விநாயகருக்கு முதல் பூஜை செய்தால் இங்கு முருக பெருமானுக்கு தான் முதல் பூஜை நடைபெறும்.

மற்ற கோவில்களில் நவக்கிரகங்கள் வெவ்வேறு திசையில் இருந்தால் இங்கு அனைத்து நவகிரகங்களும் சூரிய பகவானை பார்த்து இருக்கும்.

புண்ணியம் செய்தால் மட்டும் தென்படும் சித்தர்கள்

இந்த கோவிலில் இன்றும் தற்போது சித்தர்கள் உலவுவதாகவும் புண்ணியம் செய்பவரின் கண்களில் மட்டுமே அவர்கள் தென்படுவதாகவும் ஒரு நம்பிக்கை உலவி வருகிறது.

Facebook
Instagram
YOUTUBE