தீவிர தலைவலியிலும் சிவராத்திக்கு நடனமாடிய ஜக்கி வாசுதேவ்
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவின் மீது வன ஆக்கிரமிப்பு, யானைகள் மரணம் என பல்வேறு புகார்கள் இருந்தபோதும், அவர் மூளை ரத்தக்கசிவின் காரணமாக அறுவைசிகிச்சை செய்தபின் பலரும் அவர் மீண்டு வர பிரார்த்தித்து வருகின்றனர்.
மைக்ரெய்ன் என்ற ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டு இருந்த ஜக்கி வாசுதேவுக்கு சமீபகாலமாக தலைவலி அதிகம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் டெல்லியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, ஜக்கி வாசுதேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன்படி, “அப்பலோ மருத்துவமனை நியூராலஜிஸ்ட்களுக்கு என் தலைக்குள் என்ன இருக்கிறது என்று தெரியவேண்டும் என ஆசை. எனவே, அவர்கள் திறந்து பார்த்து ஒன்றும் இல்லை, மூளையின்றி காலியாக இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டனர்” எனக் கூறி சிரித்தார்.
மூளையில் அறுவைசிகிச்சை செய்தபின்பும், நகைச்சுவை உணர்வைப் பாருங்கள் எனப் பலரும் கமென்ட் செய்து வந்தனர்.
இதனிடையே ஜக்கி வாசுதேவின் மகள் ராதே ஜக்கி வாசுதேவ் தனது தந்தையின் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், தந்தையின் உடல்நிலை தேறிவருவதாகவும், விரைவில் குணமடைவார் என்றும் கூறியுள்ளார்.
மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையின்படி, நினைத்ததை விட அவர் நல்ல நிலையில் முன்னேறி வருவதாகக் கூறினார்.
பிரதமர் மோடி கூட ஜக்கி வாசுதேவ் விரைந்து குணமடையவேண்டும் என்று பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ளதில், கடந்த சில மாதங்களாகவே அவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இருப்பதால், மருந்து மாத்திரைகளை மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தபோதும் அவர் ஏராளமானோர் வரும் நேரம் என்பதைக் காரணம் காட்டி அவர் அறுவைசிகிச்சையைத் தள்ளிப் போட்டதாகவும் கூறியுள்ளனர்.
சிவராத்திரியன்று கடுமையான தலைவலி இருந்தபோதும், மாத்திரையைப் போட்டுக் கொண்டு ஜக்கி வாசுதேவ் தன்னை மறந்து நடனமாடி இந்த வயதிலும் உற்சாகமாக சுழன்றாடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.