வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லாத குழந்தைகளே பாலியலுக்கு இலக்காவது ஏன்?
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் உடல்நலனைப் போல் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
வீட்டில் விளையாட்டுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் வளர்ந்தால் சரியாகிவிடும், திருமணமானால் சரியாகிவிடும், சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுப் பிள்ளை, வெகுளி, வெள்ளந்தி, அனைவரிடமும் சிரிக்கச் சிரிக்க பேசுவார்கள் என்று கூறிக் கொண்டு பெற்றோர் குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் ஏதும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சமூக பக்குவம் இல்லாமல் போகும்போது, அது ஒரு மன நல பிரச்னை என்பதை அறியாமல் விட்டுவிடுவதும்தான் இதுபோன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதில் மாட்டிக் கொள்ளக் காரணம்.
சூசகமான வார்த்தைகளைச் சொல்லி தவறான செயல்களுக்கு அழைக்கும்போது, மனநலம் சரியாக உள்ள பெண்களுக்கே புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்போது, 17 வயது மனமுதிர்ச்சியற்ற சிறுமிக்கு அது சிரமம்தான்
உடல் எல்லை, பாலியல் கல்வி மிக மிக அவசியம்
இத்தகைய குழந்தைகள் பொதுவெளிக்குச் செல்வதற்கு முன்பே அவர்களுக்குக் கட்டாயம் பாலியல் கல்வியை பெற்றோர் கற்றுத்தரவேண்டும். “இது உன் உடல், யாரும் அதைத் தொட அனுமதிக்கக் கூடாது, இதனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படக்கூடும்” என்பதை அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும்.
ஆனால், இதுபோன்ற மனமுதிர்ச்சியற்றவர்களுக்கு கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். ஏனெனில் இவர்கள் வெளியுலகில் யாருடைய ஆதரவும் இல்லாமல் இயங்க முடியாது, எனும்போது அவர்களைப் பெற்றோர் தனித்து விடாது நிழல் போல் காக்க வேண்டும். அல்லது உடல் தொடுதல் எல்லைகளையும், குட் டச் பேட் டச்சையும் சொல்லித்தர வேண்டும்.
பின்வரும் அறிகுறிகளைப் பெற்றோர் கவனிக்க வேண்டும்
குழந்தைகளுக்கு அறிவுசார்குறைபாடு வருகிறது என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்
- குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற மைல்ஸ்டோன்களை அடையாதது
- நடப்பது, பேசுவது ஆகியவற்றைத் தாமதமாக செய்வது
- அதிக கோபமும், சமூகத்தில் பழகும் முறைகளைத் தெரியாதிருப்பது
- பொருட்களைக் கையாள்வதில் சிரமம் (ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ்)
- கல்வியில் பின்தங்கியிருப்பது
போதிய மனநல விழிப்புணர்ச்சி இல்லாததால், பெற்றோர் இதனை கண்டுகொள்ளாது விட்டுவிடுகிறார்கள். இதுபோன்ற குழந்தைகளின் ஆண் குழந்தையாக இருந்தால் அதீத கோபமும், பெண் குழந்தை என்றால் பாலியல் உணர்வு அதிகம் இருப்பதும் இருக்கும். ரிஸ்கி பாபுலேசன் என இவர்களை அடையாளப்படுத்துவதால் பாலியல் கல்வி அளிப்பது கட்டாயம் என மீண்டும் அறிவுறுத்துகிறோம்.
நிழல்போல் இருந்து பெற்றோர் காக்க வேண்டும்
மனப்பக்குவம், சமூகத்தில் செயல்படும் விதங்கள், பாலியல் ரீதியிலான நடத்தைகளைக் கற்றுக் கொடுத்தும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், பெற்றோர் நிழல் போல் உடன் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். யாரையும் நம்பி விடக்கூடாது என்றும், இதுபற்றி முதலில் பெற்றோர் விழிப்படைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“குழந்தைக்கு தொடர்ந்து காயச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் பெற்றோர், அதுவே மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரை அணுகுவதில்லை. அதை நிராகரித்துவிடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே தயங்காமல், சமூகம் என்ன சொல்லும் என நினைக்காமல் தைரியமாக மனநல நிபுணர்களை அணுகவேண்டியது அவசியம்” எனக் கூறினார்.
யாரும் அநாவிசயமாக பெருமையா புகழ்ந்து பேசினால், சாதாரண மன நிலையில் இருக்கும் பெண்கள் கூட ஏமாந்துவிடுவார்கள், எனவே அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், அதுவும் ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகள் அவர்களைத் தனித்துவிடும்போது “காட்டில் பாதுகாப்பின்றி இருக்கும், தப்பிக் கூட ஓடத் தெரியாத குட்டி மான் எளிதில் சூறையாடப்படுவது போல் ஆகிவிடும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.