கலர்கலரான உணவுகளில் கேன்சர் ஆபத்து
பொதுவாக உணவுகளில் இயற்கை நிறமிகளுக்கு பீட்ரூட், புதினா, மஞ்சள்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், சிந்தடிக் டை என்ற செயற்கை நிறமிகள் இயற்கை நிறமிகளை விட விலை மலிவானது. அடர் நிறத்தில் பிரகாசமாக இருக்கும். நீண்ட காலம் நிறம் மாறாமல் இருக்கும். எனவேதான், இதனை பல உணவகங்கள் பயன்பாட்டுக்குத் தேர்ந்தெடுக்கின்றனர்.
செயற்கை நிறமி கழிவாக வெளியேற 2 மாதமாகும்
செயற்கை நிறமிகளின் தீமைகளை சென்னை உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலரும், மருத்துவர் சதீஷ்குமார் எடுத்துரைத்தார். “நாம் இயற்கையான நிறமுள்ள பீட்ரூட் எவ்வளவு சாப்பிட்டாலும் கூட, உடல் அதை உணவுப்பொருளாக அங்கீகரிக்கும். 2 முதல் 3 மணி நேரத்தில் அது ஜீரணமாகி, மலம், சிறுநீர் வழியாக அந்த நிறமி சிவப்பு நிறத்தில் வெளியேறிவிடும்.
ஆனால், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட ஆரஞ்சு, மஞ்சள், கருப்பு நிற குளிர்பானங்களைப் பருகினால், அந்த நிறம் நமது சிறுநீர் மற்றும் மலத்தில் வெளிப்படாது. காரணம். செயற்கை நிறமிகள் உடலை விட்டு கழிவாக வெளியேற 50 முதல் 60 நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதுவரை, அது குடலில் ஒட்டி அல்சரை ஏற்படுத்தலாம். ஈரலில் சிக்கி அங்குள்ள திசுக்களை தாக்கி அழிக்கலாம். இதனால் கல்லீரல் செயல்பாடு குறைந்து கிட்னி ஃபெயிலியர், மூளையின் வளர்ச்சி மற்றும் செல்கள் பாதிப்பு ஏற்படும்” எனக் கூறினார்.
என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுத்தும்?
செயற்கை நிறமிகளை வைத்து ஆய்வு செய்ததில், பெரிய எலிகளை விட குட்டி எலிகளில் டிஎன்ஏ என்ற மரபணுவின் மாற்றங்கள், மூளைத் திசுக்களின் வளர்ச்சி பாதிப்பு, உடலின் இன்ஃப்ளமேட்டரி மெஷினரி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி இதை எந்த வயதில் உள்ள மனிதர்களும் தொடர்ந்து பயன்படுத்துபோது, நரம்புத் தளர்ச்சி, நடுக்கம் வருவது, நடக்க முடியாமல் போவது, ஞாபக மறதி, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது, நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக கோபம் வருவது, அதிக உடல் எடை கூடுவது, கேன்சர் உள்ளிட்ட நாள்பட்ட சரிசெய்ய இயலாத சில வியாதிகளைக் கூட ஏற்படுத்தக் கூடியது என அவர் எச்சரித்தார்.
பாக்கெட் உணவுகளுக்கு நோ
எனவே, குழந்தைகளுக்கு பாக்கெட் உணவுகள் அதிகளவில் கொடுப்பது, செயற்கை நிறமிகள் கலந்த உணவைக் கொடுப்பதை முற்றிலும் பெற்றோர் தடுத்தால் மட்டுமே, அவர்களின் ஆயுளுக்கு ஆரோக்யத்துக்கும் குறைவு இருக்காது. மசாலாக்களையும் கூடுமானவரை வீட்டில் அரைத்து பயன்படுத்துவதும் நல்லது என அறிவுறுத்தினார்.
‘’You are what you eat’’ என ஒரு பழமொழி இருக்கும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே நல்லதைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சுகர் பாய்லிங் கன்ஃபெக்சனரி என்ற பேக்கிங்குக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிறங்களும், அளவுகளும் பின்வருமாறு.
செயற்கை நிறமி அனுமதிக்கப்பட்ட அளவு
- சன்செட் எல்லோ 100 mg/per kg
- டார்ட்ராஸைன் 100 mg/per kg
- எரித்ரோசைஸன் 50 mg/per kg
- கார்மோய்சைன் 100 mg/per kg
- இண்டிகோ கார்மைன் 100 mg/per kg
- போன்சியோ 4R 100 mg/per kg
- சார்ட் க்ரீன் 100 mg/per kg
- அலூரா ரெட் 200 mg/per kg
- பிரில்லியன்ட் புளூ 100 mg/per kg
அலூரா ரெட் பயன்படுத்த அனுமதித்த உணவுகள்
- ஜெலட்டின்
- மிட்டாய்கள்
- ஜெல்லி
- சாஸ்
- பால்பொருட்கள்
இண்டிகோ கார்மைன் அனுமதிக்கப்பட்ட உணவுகள்
- ஐஸ் கிரீம்
- கன்ஃபெக்சனரி என்னும் பேக்கரி உணவுகள்
ஆப்பிள் கிரீன் அனுமதிக்கப்பட்ட உணவுகள்
- ஐஸ்
- பேஸ்ட்ரிக்கள்
- இந்திய இனிப்புக்கள்
உணவில் சேர்க்க முழுமையாகத் தடைசெய்யப்பட்ட நிறமிகள்
- ரோடமைன் பி
- கிரீன் (s) chocolate candy
- சூடான் ரெட் (சில்லி உள்ளிட்ட அனைத்து உணவிலும் தடை)
எந்தெந்த உணவுகளில் பொதுவாக இவை கலக்கப்பட வாய்ப்பு?
- மிட்டாய்
- வெல்லம்/நாட்டுச்சக்கரை
- மிளகாய் பொடி
- கொட்டைப் பாக்கு
- ரோஸ் மில்க்
- ஃப்ளேவர்ட் மில்க்
- சிவப்பு அல்லது நிறமுள்ள காய்கறிகள் (சிவப்பு முள்ளங்கி)
- ஜவ்வு மிட்டாய்
- மில்க் பேடா
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.