ஆணும், பெண்ணும் பள்ளி, கல்லூரி சென்று பயில்கிறார்கள். பணியிடத்திலும் கிட்டத்தட்ட சரிக்கு நிகர் சமானமாக வேலை செய்கிறார்கள்.

ஆனால், “வீடா?, அலுவலகமா?” என்ற கேள்வி யாருக்கு அதிகம் வருகிறது என்றால், அது பெண்ணிடம்தான்.

குழந்தை என ஒன்று பிறந்துவிட்டதும், பெண்களின் சுதந்திர சிறகுகள் ஒன்று துண்டிக்கப்படும். அல்லது தற்காலிகமாக கட்டி முடக்கப்படும்.

காரணம் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலுமே பெண்கள் அதைக் கைவிட்டு குழந்தைப் பராமரிப்பில்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிவரும்.

இல்லத்தரசிகளாக இருந்த காலம் மாறி, தற்போது குடும்பத்தின் பொருளாதாரச் சுமையிலும் பங்கு கொள்ளக் கூடிய காலம்தான் தற்போது பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது.

குழந்தை என வந்ததும், அதுவரை இருவரின் சம்பாத்யம் என்று ஓடிக் கொண்டிருந்த குடும்பத்தில் ஒற்றைச் சக்கரம் கழன்றுவிடும். குழந்தைப் பராமரிப்பு வேறு செலவுகளில் கையைப் பிசையும்.

ஆனால், நீ வீட்டில் இருந்து குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள். நான் கூடுதலாக உழைத்து சம்பாதிக்கிறேன் என சில ஆண்கள் களமிறங்கி பெண்களின் பணிச்சுமையைக் குறைப்பார்கள்.

ஆனால், உழைப்புக்கே என ஓடி ஓடி தேய்ந்து, சுயமாக சம்பாதித்து, தன்னிறைவோடு வாழ்ந்த பெண்களுக்கு கையில் பணம் இல்லை, சம்பாத்யம் இல்லை என்றால் தன்னை முடக்கிப் போட்டதாகத் தான் உணர்வார்கள்.

மன ரீதியாக தாயுடன் வளரும் குழந்தைகள் தான் தங்களை அதிக பாதுகாப்புடன் இருப்பதாக உணர்கிறது.

வேலைக்கு சென்றாலும் கூட, குழந்தையா? வேலையா? என இருதலைக் கொள்ளி எறும்பாக மாறிவிடுவார்கள். இதுபற்றி தேசிய அளவில் நிறுவனம் ஒன்று ஆய்வுகளையும் மேற்கொண்டது.

அதன்படி, திருமணத்துக்குப் பின் 45 சதவீத பெண்கள் வேலை விட்டு விடுகின்றனர்.

பெரியளவில் சம்பாதித்து வந்த நடிகைகளாக இருந்தாலுமே, நடிப்புக்கு முழுக்கு போடுவதை நாம் பார்த்துண்டு.

குழந்தை பிறந்த மறு ஆண்டே 24 சதவீத பெண்கள் வேலையை விடுகின்றனர்.

5 ஆண்டுகள் கழித்து 17 சதவீத பெண்கள் பணியில் சேர்வதில்லை.

10 ஆண்டுகளுக்குப் பின் 15 சதவீத பெண்கள் பணிக்கு வராமலேயேதான் உள்ளனர்.

இது தாய்மைக்கான தண்டனையாகவோ, அபராதமாகவோ இருக்கக் கூடாது என்கிறார் பெண் பத்திரிக்கையாளர் பால்கி சர்மா உபாத்யாய்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மட்டும் பெண்களை குழந்தைப் பேறுக்குப் பின் பணியிடத்துக்கு கொண்டுவரச் செய்ய உதவாது.

மாறாக பணியிடத்திலும் பாலின சமத்துவம் தேவைப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பெண்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களும் அங்கேயே காப்பகங்களை அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதை மேற்கொள்வதில்லை.

எனவேதான் இத்தகைய சூழல்களில் பெண்கள் தொழில் முனைவோராக மாறிவரும் வரவேற்கத்தக்க சூழலும் உருவாகிறது. குழந்தை சற்று வளர்ந்ததும், அவர்கள் தங்கள் தொழிலில் முழு ஈடுபாட்டோடு செயல்படத் தொடங்குகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE