இப்போ தெரியுதா? படிப்போட அருமை? ஸ்ரீபதிக்கு சல்யூட்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் ஸ்ரீபதி. இவர், முதல் முறையாக நீதிபதி ஆகும் பழங்குடியின பெண் ஆகிறார்.
படிப்புதான் எப்போதும், எத்தகையவருக்கும் பலன் தரும் ஆயுதம். இது நகரப்பகுதிகளில் பெரும்பாலான பெண்களுக்கு சாத்தியம் தரக்கூடிய ஒன்றுதான். அதுவும் அடிப்படை வசதிகூட இல்லாத கிராமத்தில், பிறந்த பெண்கள் எல்லாம் அடிப்படைக் கல்வியை தாண்டுவது என்பதே சற்று அரிதானது. ஆனால்,
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த கிராமத்தில் பெரும்பாலும் அடிப்படை வசதியே இல்லைதான். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண். மிக இளம் வயதிலேயே உரிமையியல் நீதிமன்ற நீதிபதி என்ற நிலையை எட்டியிருக்கிறார். இதுகுறித்து முதல்வர், மு.க.ஸ்டாலினும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பழங்குடியினப் பெண்ணான ஸ்ரீபதி நீதிபதியானதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாதிரியில் நடக்கும் இந்த ஆட்சியில், அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வரப்பட்டது. அந்த ரரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன்
னேறவேண் டும்வைய மேலே!”
யாரிந்த ஸ்ரீபதி?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பெரிய சாதனைக்குச் சொந்தக்காரரான இவரது வயது மிகவும் சிறியது தான். வெறும் 22 வயதிலேயே தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வை ஸ்ரீபதி எழுதியிருந்தார். இது, அனைவரும் செய்வதுதானே? இதிலென்ன சாதனை என பலரும் நினைக்கலாம்.
ஆனால், எந்தவொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம் என சொல்லப்படும் பிரசவம் முடிந்த 2 நாளிலேயே இந்த தேர்வை எழுதி வெற்றியைத் தனக்குரியதாக்கி இருக்கிறார். அதில் வெற்றி வாகையும் சூடியுள்ளார் ஸ்ரீபதி. இனி இவர் 6 மாத கால நீதிபதி பயிற்சிக்கு செல்ல உள்ளார்.
நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீபதிக்கு ஊர் மக்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் அனைவரும் ஊர்வலமாக அழைத்து வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
நீதிபதி தேர்வுக்கு ஸ்ரீபதி சென்று தேர்வு எழுதியது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு. நீதிபதி தேர்வு எழுதும் அதே தேதியிலேயேதான் ஸ்ரீபதிக்கு பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு நாட்கள் முன் குழந்தையும் பிறந்தபோதும், தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார். அவர், ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கார் ஒன்றை பாதுகாப்பு முறையில் சொகுசு காராக மாற்றி சென்னைக்கு அழைத்து சென்று தேர்வு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபதியை சாதிக்க தூண்டிய இரு தூண்கள்
ஸ்ரீபதிக்கு பக்கத் துணையாக இருந்தவர்களில் ஒருவர் ஸ்ரீபதியின் கணவர் வெங்கடராமன். ஸ்ரீபதியின் ஆசைகளுக்கு தடை கல்லாக நிற்காமல் வழித்துணையாக இருந்துள்ளார். இரண்டாவது மற்றும் ஆணிவேராக இருந்து உத்வேகம் அளித்தவர் அவரது தாய். தனது கணவரின் ஊரில் இருந்தால், பெண்பிள்ளை படிக்க முடியாமல் போய்விடும் எனக் கருதி தனது தாயாரின் ஊருக்கு வந்து மகள் ஸ்ரீபதிக்கு அழியாச் செல்வமான கல்வியைப் பரிசளித்திருக்கிறார்.
இந்த இரண்டு தூண்கள் உடன் நின்று, ஸ்ரீபதி கொடுத்துள்ள மகா வெற்றியால், தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு உத்வேகம் தரும் வகையில் முன் உதாரணமாகியுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.