பஞ்சுமிட்டாயில் பொதிந்திருக்கும் ஆபத்து
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களே கூட ஆசை ஆசையாக வாங்கி சாப்பிடும் ஒரு உணவுத் திண்பண்டம் பஞ்சுமிட்டாய். புதுச்சேரியில்தான் தற்போது இந்த பூகம்பம் கிளம்பியுள்ளது.
புதுச்சேரியில் அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்டே அதிகளவிலான பஞ்சு மிட்டாய்களை உற்பத்தி செய்வதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் கூட பல இடங்களில் பஞ்சுமிட்டாய்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான பொருட்காட்சி, பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பஞ்சுமிட்டாய்கள் விற்கப்படுகிறது. அதில், பிங்க் என்ற இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண நிறங்களில் பஞ்சுமிட்டாய்கள் விற்கப்படும்.
சோதனை நடந்தது எப்படி?
புதுச்சேரியில் செவிலியர் கல்லூரி அருகே பஞ்சு மிட்டாய்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைப் பறிமுதல் செய்து புதுச்சேரி அதிகாரிகள் ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றனர். அந்த ஆய்வின் முடிவில், அரசால் தடை செய்யப்பட்டதும், தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டும் வரும் ரோடமின்-பி என்ற ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
உணவுப்பாதுகாப்புத்துறை என்ன சொல்கிறது?
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், ரசாயனம் பூசிய பஞ்சுமிட்டாய்களின் ஆபத்து பற்றி தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட ரோடமின் – பி உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்து விற்பது மிகவும் தவறானது என்றும், இதைச் சாப்பிடும குழந்தைகளுக்கும், குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
வடமாநிலத்தவர் சிக்கியது எப்படி?
பிடிபட்ட இளைஞரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வடமாநில இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் இந்த பஞ்சு மிட்டாய்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது. மேலும், காவல்துறையினரின் உதவியோடு பஞ்சுமிட்டாய் விற்பவர்களை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.
அந்த ரசாயனம் கொண்டு பஞ்சுமிட்டாய் தயாரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. உரிமம் பெற்றே பஞ்சுமிட்டாய் தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர் சோதனை
தடை செய்யப்பட்ட ரசாயனம் கொண்டு பஞ்சுமிட்டாய் விற்கப்படுகிறதா? என தொடர் ஆய்வும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.