டாக்டராகும் கனவோடு வந்த பணிப்பெண்ணுக்கு சிகரெட் சூடு; எம்எல்ஏ மகன்-மருமகள் மீது புகார்
“மாசம் 16,000 சம்பளம், சேத்து வச்சுட்டு அப்டியே படிச்சா ஒரு நாள் டாக்டராயிடலாம்” என்கிற கனவோடு இருந்தவர் தான் வீரமணி செல்வி தம்பதியின் 18 வயது மகள்.
செல்வியும் தன் மகள் தன்னைப் போல் ஆகிவிடக்கூடாது என்ற கனவில் தனது மகளை கஷ்டப்பட்டு பள்ளிப்படிப்பை முடிக்கச் செய்தார். சென்னை கேளம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்தார் செல்வி. அங்கு இருந்த ஒருவர் மூலமான இப்படி ஒரு அழைப்பு வந்தது.
“பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியுடைய மகன் வீட்ல, வேலைக்கு ஆள் வேணும்னு கேக்குறாங்க. நம்பிக்கையா யாராச்சும் இருந்தா சொல்லுங்க, நல்ல சம்பளமும் தருவாங்க” என எம்எல்ஏவின் நண்பர் ஒருவர் செல்வியிடம் கூறினார்.
செல்வியும் தனது 18 வயது மகளை பணிக்கு அனுப்புவது பற்றி சிந்தித்தார். தனது மகளை பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகள் ஆண்ட்ரூஸ் மற்றும் மருமகள் மெர்லினின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த இளம் பெண்ணுக்கு மாதம் 16,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாகக் கூறியிருந்ததாகவும் தெரிகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் ஆண்ட்ரூஸ்-மெர்லின் வீட்டில் அந்தப் பெண் பணியில் சேர்ந்தார். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவில் படிக்க அப்பெண் திட்டமிட்டிருந்ததாகவும், இருந்தபோதும் இரவு – பகல் பாராது வேலை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பளம் நல்லபடியாக வரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் பணி செய்து வர, மாதக்கணக்கில் பேசியபடி சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. மாதம் ரூ.5,000 கூட கிடைக்கவில்லை என்ற நிலையில், அவர் தான் வேலையை விட்டு செல்வதாகக் கூறியுள்ளாராம்.
ஆனால், அவரை வேலையில் இருந்து விடுவிக்கவும், சம்பளத்தைத் தரவும் மறுத்த எம்எல்ஏவின் மகனும்-மருமகளும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த இளம்பெண்ணின் கன்னம், முதுகு, கை ஆகிய இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரூசும், மருமகள் மெர்லினும் அந்த இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு பொங்கலுக்கு அவரது சொந்த ஊரில் விட்டுவிட்டு வந்துள்ளனர். அங்கு இருந்த உறவினர்கள் பெண்ணின் நிலையைப் பார்த்து, சித்ரவதையைக் கேள்விப்பட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அந்த இளம்பெண்ணின் நிலைமையைக் கண்டு, அங்குள்ள காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் சம்பவம் சென்னை திருவான்மியூர் காவல்எல்லைக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததாகத் தெரிந்ததை அடுத்து, அவர்கள் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் புகாரளிக்காததால் அரசியல் அழுத்தமோ, அச்சமோ ஏதும் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது. இந்தப் புகாரில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோரியுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.