பொங்கலன்று என்னதான் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்தாலும், சர்க்கரை பொங்கல் கோவிலில் செய்ததாக இருந்தால், இன்னொரு முறை வரிசையில் நின்று வாங்கி சாப்பிடலாமா எனத் தோன்றும். அதற்கு சில கைப்பக்குவம் உள்ளது. அந்த பக்குவத்தின் ரகசியத்தை த காரிகை வழங்குகிறது.

சர்க்கரைப் பொங்கலில் இருவகை. ஒன்று வாயில் வைத்ததும் கரையும். இரண்டு வழவழவென்று சற்று கெட்டியாக இருக்கும். ஆனால் பொங்கலைச் சரிவர செய்யாவிட்டால், அது மதியம் தாண்டுவதற்குள் நீர்த்துப் போய்விடும்.

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருள்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 2 கப்
ஏலக்காய் பொடியாக்கியது – 1/2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 50 கிராம்
உலர்ந்த திராட்சை – 50 கிராம்
பச்சை கற்பூரம் – 1 பிஞ்ச்

செய்முறை

முதலில் ஊற வைத்த பச்சரிசியை 2 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவவும்.

பின், அதில் 4 கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

பொங்கல் பானை இருந்தால் அதில் செய்வதே உசிதமானது.

ஒருவேளை பொங்கல் பானை இல்லாவிட்டால், பிரஷ்ஷர் குக்க்கரில் அரிசியையும் தண்ணீரையும் போட்டு 4 முதல் 5 விசில் விட்டு எடுக்கவும்.

அதற்குள் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு காய்ச்சி, கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

குக்கரில் விசில் அடங்கியதும், பருப்பு மத்து வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

மசித்த சாதத்தில் வெல்லாப்பாகை ஊற்றிக் கிளறிக் கொள்ளவும்.

அந்தக் கலவையில் பொடியாக்கிய ஏலக்காயைத் தூவிவிட்டு மீண்டும் கிளறவும்.

மற்றொரு பக்கத்தில் அடுப்பைப் பற்ற வைத்து, முந்திரி, ஏலக்காயை நன்கு பொன்னிறமாகவும், திராட்சை உப்பும் வகையிலும் வறுத்து எடுக்கவும்.

பின், பின் அதனை நெய்யோடு ஊற்றி சர்க்கரைப் பொங்கலைக் கிளறவும். பச்சைக் கற்பூரம் சேர்ப்பது அவசியம்.

டிப்ஸ்

சாதத்தை நன்கு குழைய வேக வைக்க வேண்டும்.

ஒரு பங்கு பச்சரிசிக்கு ஒன்றரை பங்கு முதல் இரண்டரை பங்கு வரை வெல்லம் சேர்க்கலாம்.

வெல்லம் தண்ணீர் மூழ்கும் அளவு நீர் ஊற்றினால் போதும்.

வெல்லப் பாகு காய்ச்சி சற்று கெட்டடியான பின் தனியாக வடிகட்டி எடுக்கவும்.

சிறு கற்கள், மண் இருக்க வாய்ப்புண்டு.

செய்முறையில் என்னதான் 3 ஸ்பூன் நெய் எனக் கூறினாலும், நீங்கள் உங்களது விருப்பத்துக்கு ஏற்ப அதனை சேர்த்துக் கொள்ளலாம்.

பொங்கலுக்கு எப்போதுமே பசு நெய் சிறந்தது.

தவறாமல் 1 பிஞ்ச் பச்சைக் கற்பூரம் சேர்த்தால், கோவில் பொங்கலின் சுவையும், மணமும் வரும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE