உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? ரூ.50,000 பெற நாளை கடைசி

1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றிமைக்கும் திட்டமாகும்.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல்.

பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல்.

இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல்.

பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல்.

பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல்.

திட்டத்தின் கீழ் வைப்பு முறை:

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின்குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத வேண்டும். இவ்வாறு, முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர உதவும்.

பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட 6வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக, ஆண்டு வருமான வரம்பு ரூ. 72,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் வயது உச்ச வரம்பு 40 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, நாளை அதாவது அக்டோபர் 25, 2023 தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE